
துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. புதியவகை கொரோனாவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சுமார் 2 மாதங்களாக தமிழகத்தில் 10-க்கும் கீழ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படியில், நேற்று மதுரை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த தாய் மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் விமானத்தில் பயணித்த 20 பயணிகளுக்கு தொற்று உறுதியானது. அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும், எந்த வித தீவிர அறிகுறிகளும் இல்லை என முதல் கட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் பயணித்த அனைவரையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் புதியவகை கொரோனாவால் பதுக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் மரபணு தொகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.





