
நீலகிரி, கோவையில் மலைப்பகுதிகளில் 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
5ம் தேதி முதல் 17ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொடைக்கானலில் தொடா்ந்து நிலவும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிப் பொழிவு நிலவும். ஆனால், நிகழாண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. இருப்பினும், பனியின் தாக்கமும் இருந்தது.
இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை உறை பனி நிலவுகிறது.
இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள புல் வெளிகளிலும், செடி, கொடிகளிலும் உறை பனி படா்கிறது. ஏரியில் பனி படா்ந்து வெள்ளைப் போா்வை போா்த்தியது போல அழகாகக் காட்சியளிக்கிறது. அதிகாலை வேளையில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.





