
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களை உடன் இயக்கவும் ,வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்யவும் , நீண்ட நாட்களாக சிறப்பு ரயில்களும் இயங்கும் ரயில்களை நிரந்தரமாக இயக்கவும், தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதை மதுரையில் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் ரயில்வே வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்தில் தமிழக எம்.பி.,க்கள் ஒருங்கிணைந்து வலியுறுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் சென்னை ரயில்வே தலைமையக அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள், கட்டுமான பிரிவு, ரயில் இயக்கம், இயந்திரவியல், பாதுகாப்பு பிரிவு என முக்கிய அதிகாரிகள் குழு பங்கேற்கிறது. இதில் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை,, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி எம்.பி.,க்கள் பங்கேற்க ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. வைகோ எம்.பி.யும் பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ரயில் வழித்தடங்கள் பெரும்பாலும் இரட்டை ரயில் பாதைகளாக மாற்றியமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சில கூடுதல் ரயில்கள் தவிர, மீட்டர் கேஜ் வசதி இருந்தபோது இயக்கப்பட்ட ரயில்களே இன்னும் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இரட்டை ரயில் பாதைகள் பணி முடிந்ததால் பயண நேரம் வெகுவாக குறையும். எனவே தென் மாவட்ட நகரங்களை இணைக்கும் விதமாக சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்களை நீட்டிக்க வேண்டும் என்பதை முதன்மையாக வலியுறுத்த வேண்டும்.
கன்னியாகுமரி சென்னை இடையே நாகர்கோவில் நெல்லை மதுரை திருச்சி யில் நின்றுசெல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.
குருவாயூர் புனலூர் ரயிலை மதுரை வரை செங்கோட்டை வழி நீட்டிப்பு செய்யவும்,இதுபோல் தென் மாவட்டங்களில் வர்த்தக பகுதிகளான விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி உள்ளிட்ட நகர்களை இணைக்கும் வகையில் கோவில்பட்டியில் இருந்து தினமும் திண்டுக்கல்லுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு பெரும் பயனாக இருக்கும்.கொல்லம் -செங்கோட்டை -மதுரை — கோவை (பழநி, பொள்ளாச்சி வழி) வழித்தடம் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தினம் 6 ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் ரூ.750 கோடி செலவிட்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின் தினம் ஒரு ரயில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
கோவையில் இருந்து மதுரை விருதுநகர் செங்கோட்டை வழி கொல்லத்திற்கும், திருநெல்வேலி -தென்காசி -மதுரை-கோவை வழியில் மேட்டுப்பாளையத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.மதுரையில் சென்னையை அடுத்து அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கோவை பகுதிக்கு செல்கின்றனர்.
எனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்கள் இயக்க வலியுறுத்த வேண்டும்.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை வரை ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதுடன் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.
கொல்லம், செங்கோட்டை மதுரை வழி ராமேஸ்வரம் திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.பகல்நேர ரயில்கள் இயக்குவோம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துாத்துக்குடி – பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இதுவரை இயக்கப்படவில்லை. அதை விரைவில் இயக்க வேண்டும். தற்போது துாத்துக்குடி – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஈரோடு வழியாக இயங்கிக்கொண்டிருப்பதை சேலம் வழியாக இயக்கினால் பயண நேரம் குறையும்.
தற்போது மீண்டும் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில்கள் இயங்குவதால் கூடல்நகர் ஸ்டேஷனில் வசதிகள் இருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடம் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்கள் திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,யால் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதை, ஏற்கெனவே இருந்தது போல் சென்னை ஆர்.ஆர்.பி., மூலம் மதுரைக் ரயில்வே கோட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் மாற்றம் கொண்டுவர எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்








