Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்-மு.க.ஸ்டாலின்..

இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்-மு.க.ஸ்டாலின்..

To Read in Indian languages…

500x300 1863566 gov

நமது கவர்னர் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை ராஜ்பவனை “அரசியல் பவனாக” மாற்றிக் கொண்டிருக்கிறார். இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என கவர்னர் மீது மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடுமையாக தாக்கி பேசினார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

இந்த ஆண்டு “கவர்னர் உரை” கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், 2-வது முறையாக கவர்னர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் கவர்னர், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை 2-வது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சிக் கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும், தி.மு.க. முன்னணிப் படையாகச் செயல்படும் என்று தலைநகர் டெல்லியில் வைத்துப் பேரறிஞர் அண்ணா கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது.

“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் தேவையில்லை” என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும், அதை முத்த மிழறிஞர் கலைஞர் வழி மொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை.

இந்த அரசும் தவறியதில்லை. அனுமந்தய்யா நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1969-ல்,  “கட்சி அரசியல் வேறுபாடு மற்றும் ஒருதலை பட்சமான செயல்பாடுகளின்றி, நம்பிக்கை வைக்கக் கூடியவராக கவர்னர் இருக்க வேண்டும்” என்று கூறியது. முத்தமிழறிஞர் கலைஞர் நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான “ராஜமன்னார் குழு” மத்திய-மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில், “கவர்னர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது” என்று பரிந்துரைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இதே மாமன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு, மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது வரலாறு.

மத்திய அரசு-மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான கமிஷன், “கவர்னர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக” இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்யப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் 2000-ம் ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி வெங்கடா சலய்யா அறிக்கையும் இதே கருத்தையே வலியுறுத்தியது.

இன்னும் சொல்லப் போனால், ஜனாதிபதியை பதவி நீக்க “இம்பீச்மென்ட்” அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, கவர்னர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் “இம்பீச்மென்ட்” அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோ சனையையே அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கர், “கவர்னர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட கவர்னராக செயல்பட வேண்டும்” என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தி இருக்கிறார். 2010-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பால கிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “கவர்னர் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல” என்று “பி.பி. சிங்கால்” வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் கவர்னர் இருக்க வேண்டும்” என்று எத்தனையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது கவர்னர் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதில் இருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது.

கவர்னர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்த சட்ட மன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொது வெளியில் பேசுகிறார்.

அவர் கவர்னர் என்ற நிலையைத் தாண்டி அரசியல் வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ, அந்தத் தகுதிகளையெல்லாம் மறந்து விட்டுப் பேசுகிறார்.

அதுவும் குறிப்பாக, பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று, “வித் ஹோல்டு” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று கவர்னர் விதண்டாவாதமாக பேசுகிறார்.

இந்த “வித் ஹோல்டு” அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-ன்கீழ் “கவர்னரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி விட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி கவர்னருக்கு இல்லை” என்பதே தெளிவு. அதைவிட ஒரு மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், அதைக் கூட அமைச்சரவையின் அறிவுரைப்படியே கவர்னர் செய்ய வேண்டும் என்பதே அரசியல் நிர்ணய சபையில், இந்த அரசியல் சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடைபெற்ற போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள். சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்ட மன்றங்களுக்கு வழங்கி விட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன கவர்னருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

அரசியல் சட்டம் கவர்னருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால்தான் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளையும் மீறி, அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பொது வெளியில் பேசுகிறார்.

அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள “மதச்சார் பின்மைக்கு” எதிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் குறுக்கே நிற்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை “அரசியல் பவனாக” மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார். கவர்னரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல. கவர்னரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம்.

கவர்னர் பேசி வந்த கருத்துகளுக்கு, பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில், சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக, நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை. எடுத்தவுடன் சட்டம் போடு வதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும், எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை.

ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா என்பது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்து, வல்லுநர்கள் கருத்து, சட்டங்கள், தீர்ப்புகள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய உங்களுடைய கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் உருவாக்குகிறோம்.

இப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசின் கவர்னர் உரையில் இருந்த சில பகுதிகளை, சொற்களை தவிர்த்துவிட்டு கவர்னர் உரையாற்றியதை திருத்துவதற்காகவும், அரசின் கவர்னர் உரையை முழுமையாக பதிவு செய்வதற்காகவும், நானே முன் மொழிந்து இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் 9.1.2023 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். இன்று, இதே மாமன்றத்தில், உங்கள் முன் ஒரு தீர்மானத்தை மொழி கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாய கரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மாண்புமிக்க இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழக கவர்னர் அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் கவர்னர் தெரிவிக்கும் சர்ச்கைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப் படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசையும், ஜனாதிபதியையும் வலியுறுத்துவது என்றும், மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்ட மன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, கவர்னருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.”

என்னும் தீர்மானத்தை நான் மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டு, அமைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதன் பிறகு முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர். 144 உறுப்பினர்களின் ஆதரவோடு தனித்தீர்மானம் நிறைவேறியது. விவாதம் தொடங்கும் போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகியோர் சபையில் இருந்தனர். அவர்கள் தீர்மானம் தாக்கல் ஆனதும் வெளிநடப்பு செய்து விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe