
திருநெல்வேலி அருகே நவதிருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் இன்று பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
காவிரிக்கரையில் திருப்பேர் என்ற திருத்தலம் இருப்பதுபோல், தாமிரபரணிக் கரையில் திருப்பேரை இருக்கிறது. தெற்கே இருப்பதால் தென் திருப்பேரை.
நவதிருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் இன்று பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயில் உற்சவருக்கு நிகரில் முகில் வண்ணன் என்பது திருநாமம். சுவாமி நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இப்பெருமாளைப் பாடியுள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதரை முகில் வண்ணன் (அழகுமிக்கவன்) என்று பாடிய நம்மாழ்வார், தென் திருப்பேரை பெருமாளை நிகரில் முகில் வண்ணன் (அரங்கநாதருக்கு இணையாக அழகுமிக்கவன்) என்று பாடியிருக்கிறார்.
இன்று காலை 9 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ரதவீதிகள் சுற்றி தேர் நிலையம் வர மாலை 6 மணியாகிவிடும். தென் மாவட்டங்களின் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று இங்கு திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





