
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, எச்.டி.குமாரசுவாமி உள்ளிட்டோர் குடும்பத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மேலும், நடிகர் பிரகாஷ் ராஜ், உபேந்திர ராவ், ரமேஷ் அரவிந்த், நடிகை அமுல்யா, தொழிலதிபர் இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தனர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பாலியில் உள்ள ஹனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா,தனது மகன் பிஒய் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள ஹுச்சராயா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். விஜயேந்திரர் தனது தந்தை எடியூரப்பா போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடியில் எடியூரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. சந்தேகம் எதுவும் இல்லை என்றும் பாஜக 130-150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதே போல், பெங்களூரு ஜெயாநகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இதனிடையே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “காலை வணக்கம் கர்நாடகா.. நான் வக்குப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.





