ஒரு சமுதாயம் குறித்து அவதூறாக எழுதிய முருகேசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சற்றுமுன்

கரூர்: ஒரு சமுதாயத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிட்டு, அவதூறாக புத்தகம் எழுதிய எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெள்ளப்பாறையை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகேயுள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எல்ஐசி ஏஜெண்டான இவர் எழுத்தாளராகவும் உள்ளார். இவர் “பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த 28.12.2014-ல் கரூரில் வெளியிட்டார். இதில் உள்ள நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் என்ற தலைப்பிலான சிறுகதையில் ஒரு திருநங்கையின் வாழ்க்கையை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து எழுதியுள்ளார். அதில் தங்கள் சமுதாயம் குறித்து தவறாகச் சித்திரித்துள்ளதாகவும், அந்த நூலைத் தடை செய்ய வேண்டும், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அந்தச் சமுதாயத்தினர் கடந்த வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் முருகேசன்மீது நூல் ஆபாசமாக இருத்தல் (292), புத்தகத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல் (153), எழுத்துகள் கலவரத்தை உருவாக்குதல் (504, 505) உள்ளிட்ட 5 பிரிவுகளில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.