கரூர் தோகைமலை அருகே சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் உயிரிழப்பு

சற்றுமுன்

girls1-horz கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மாரிப்பாறைபட்டி என்ற இடத்தில் உள்ள கோயில் சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கழுகூர் ஊராட்சி அ. உடையாப்பட்டியைச் சேர்ந்தவர்கள் துரைசாமி மகள் வனிதா (13), மாணிக்கம் மகள் பாண்டிமீனா (13), ரவி மகள் சந்தியா (13), மூர்த்தி மகள் சரோஜினிதேவி (13). இவர்கள் அனைவரும் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும், சக மாணவர், மாணவிகள் 9 பேருடன் மாரிப்பாறைப்பட்டியில் மலைமேல் உள்ள சுயம்பு பெருமாள் கோயிலுக்கு வழக்கம்போல் செல்வது போலவே சனிக்கிழமை காலையும் சென்றனர். அப்போது, இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு, கைகழுவுவதற்காக கோயிலில் உள்ள சுனையில் இறங்கியுள்ளனர். அப்போது பாறையில் கால் வழுக்கி வனிதா நீருக்குள் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாண்டிமீனா, சந்தியா, சரோஜினிதேவி ஆகியோர் திடீரென ஒருவன்பின் ஒருவராக நீரில் இறங்கியுள்ளனர். இதைக் கண்ட மற்ற மாணவிகள் ஓடிச்சென்று மலையடிவாரத்தில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், 4 மாணவிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, வருவாய் அலுவலர் மு.அருணா, மாவட்டக் கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். பின்னர், மாணவிகளின் உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.