
மதுரை டூ போடி, சென்னை டூ போடி ரயில் .. நாளை முதல் மாறுது.. தேனிக்கு வந்த சூப்பர் அறிவிப்பால் தேனி மற்றும் கேரளா மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி: மதுரை – போடி இடையேயும், சென்னை போடி இடையேயும் ஜூன் 15-ம் தேதி முதல் ரயில் (நாளை முதல் )இயக்கப்பட உள்ளது. தேனி மாவட்ட மக்களின் பல வருடக்கனவு நாளை நினைவாகப் போகிறது.
சுமார் 110 வருடங்களுக்கு முன்பே அதாவது 1909-ல் மதுரை போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். இந்த பாதை அமைக்கப்பட்டதற்கு காரணம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலாக்காய், காபி, டீத்தூள் போன்ற விளை பொருட்களை எடுத்து செல்வதற்காகத்தான். மதுரை போடி இடையே 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் பயணிகள் ரயில்கள் இயங்கி வந்தன.
பல சினிமா படங்களின் படப்பிடிப்புகள் மதுரை போடி ரயிலில் தான் அந்த காலத்தில் எடுக்கப்பட்டன. கேப்டன் பிரபாகரன்,கிழக்கே போகும் ரயில் போன்றவை வெகு பிரபலமான படங்கள் ஆகும். தேனி மாவட்டத்தின் வாழ்வியலை அங்கமாக இருந்த இந்த கிழக்கே போகும் ரயில், 2010 டிசம்பர் முதல் நிறுத்தப்பட்டது, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங் கியது. சுமார் 10 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்த பணிகள், கடைசி 3 வருடங்களத்தான் முழு தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.
12 ஆண்டு களுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை – தேனி வரையிலும் ரயில் சேவையை கடந்த ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி – போடி வரை 15 கி.மீ.க்கான பணி தொடர்ந்து நடந்தது. தற்போது அனைத்துக்கட்ட சோதனைகளும் நிறைவடைந்துள்ளது.
ஜூன் 15-ம் தேதி முதல் மதுரை- போடி அகல ரயில் பாதையில் தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை- மதுரை துரந்தோ ரயில் போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா வரும் 15 ம் தேதி தேனி மாவட்டம் போடியில் நடைபெற உள்ளது. ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் ஓ.முருகன் போடியில் இந்த சேவையைத் துவக்கி வைக்கிறார். வரும் 15.06.23 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு ரயில் எண் 20602 : போடி – சென்னை சென்ட்ரல் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. ரயில் எண் 20602: போடி – சென்னை ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரயில் எண் 20601 சென்னை – போடி ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போடி – சென்னை இடையே தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். 20601 சென்னை – போடி ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடியைச் சென்றடையும். 20602 போடி – சென்னை ரயில் போடியில் இரவு 08.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். 15.06.23 இரவு 8.45 மணிக்கு போடி – மதுரை ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.
போடி – மதுரை தினமும் மாலை 05.50 க்கு போடியில் புறப்பட்டு 07.50 க்கு மதுரை சென்றடையும். மதுரை – போடி தினசரி ரயில் காலை 08.20 க்கு மதுரையில் புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும்.
இந்த நிலையில் மதுரை போடி மதுரை இடையே விரைவு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) நாளை போடி-மதுரை, போடி -சென்னை இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை-போடி இடையே அகல ரயில் பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக்கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது.
OMS (Oscillation Monitoring System) எனப்படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவிகள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது.
ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) போடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.