
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு! வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
அதிமுக., ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற போது ஊழல் சட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் இருந்து முழுமையாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. தற்போது சிகிச்சையில் இருக்கும் அவரது போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு, செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். ஆனால், அவர் துறை இல்லாத அமைச்சராக நீடிப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் முதலில் கடிதம் எழுதினார் ஆளுநர்.
ஆனால், அதை முதல்வர் ஏற்காத நிலையில், நீதிமன்ற விசாரணைகள் காரணமாக, ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி நேற்று முன்தினம் அமைச்சரை பதவி நீக்குவதாகக்கூறி, அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதமும் அனுப்பி இருந்தார். அதில் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். அமைச்சரை தன்னிச்சையாக நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தலைமை வழக்கறிஞர் கருத்தைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாமே என்று ஆளுநருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி கடிதம் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதில் எனது அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதல்வரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதல்வரின் ஆலோசனைப் படிதான் ஆளுநர் செயல்பட முடியும். அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதல்வரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலைய்ல், செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபடி ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அட்டர்னி ஜெனரல் தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் தில்லி வருவார் என்று தெரிகிறது. இதனால், தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதல்வர் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. அதன் பின்னரே, ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவு குறித்த முடிவு தெரியும்!