
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி கையில் முடிவு சென்றுள்ளது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்பு- நீதிபதி நிஷா பானு.
- ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல – நீதிபதி பரத சக்கரவர்த்தி
- உடனடியாக விடுவிக்க வேண்டும் – நீதிபதி நிஷா பானு
- நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை – நீதிபதி பரத சக்கரவர்த்தி
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முடிந்து ஜூலை 4 இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேகலா தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்தது. அதில் ‘இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார்’ எனக்கூறி உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்தார்.
மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, ‘இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. காவல் முடிந்த பிறகு செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும்’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தமிழர்
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், இந்த வழக்கினை 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது.