
தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து நன்றாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி வருகின்றனர்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய சீசன் தாமதமாகவே இந்த வருடம் தொடங்கியது. தற்போது கேரளத்தில் கனமழை பெய்து வருவதால், அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை தமிழக மாவட்டங்களில் மழையும் சாரலுடன் கூடிய காற்றும் அடித்து வருகிறது. திருக்குற்றால மலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் மழை அளவு குறைந்த நிலையில் அருகில் நீர்வரத்து மிதமாக இருப்பதும் என தொடர்கிறது. அருவியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது போலீசார் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வருகின்றனர்.
குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பின் அனுமதிக்கப்பட்டது. அதுபோல், ஐந்தருவியில் அனைத்து ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வேகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பழைய குற்றாலம் அருவியில்.இன்று காலை முதல் தண்ணீர் நன்கு விழத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலேயே பழைய குற்றால அருவி தண்ணீர் நன்றாக பரந்து விழும் என்பதால் இங்கே குளிப்பதில் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளதால், அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.