
கனல் கண்ணன் மற்றும் S.J.சூர்யா மீது வழக்கு மற்றும் சமூக செயற்பாட்டாளர் உமா கார்கிக்கு விசாரணைக் காவல் என்று செயல்படும் திமுக., அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது இந்து முன்னணி. இது குறித்து இன்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இளம் பெண்களுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்து முன்னணி கலை இலக்கிய அணி மாநில தலைவரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் அவர்கள் தான் திரைத் துறையை சேர்ந்தவர் என்பதால் சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்ட நடன வீடியோவை ரசனை எண்ணத்தோடு பகிர்ந்துள்ளார்.
இது எப்படி குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான விரோதமாகும். கனல் கண்ணன் அவர்கள் தானாக பாதிரியார் போன்று போலியாக நடிக்க வைத்து வீடியோ தயார் செய்யவில்லை. ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் வைரலான வீடியோவை தனது பக்கத்தில் பதிவிட்டமைக்காக வழக்கு போடுவதெல்லாம் கருத்துரிமையின் குரல்வளையை நசுக்குவதாகும்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாயை திறந்தாலே கருத்துரிமை,சமூக நீதி, கருத்தை கருத்தால் எதிகொள்ள வேண்டும் என்று பக்கம் பக்கமாய் பேசுபவர்கள்.
ஆனால் இன்று இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் பொய் வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது என்று காவல்துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் திமுக மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் உமா கார்கி அவர்களை பெண் என்றும் பாராமல் சாதாரண வழக்கிற்கு கைது செய்தது மட்டுமில்லாமல் விசாரணை காவலில் எடுப்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.போலீஸ் கஸ்டடியில் எடுத்து பயமுறுத்த பார்க்கிறார்களா.?
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் காவல்துறையை வைத்து அடக்குமுறையில் ஈடுபடுவதா?அதேபோல் பாஜகவின் திரு.S.J.சூர்யா அவர்கள் சிதம்பரம் கோவில் குறித்து வெளியிட்ட பதிவிற்கும் வழக்கு
போடப்பட்டுள்ளது. தமிழக அரசு இதுபோன்ற அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல் தமிழகத்தில் சாதிய மோதல், விலைவாசி
ஏற்றம்.திமுக உறுப்பினரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடாவடி ஆகியவற்றை தடுத்திட காவல்துறையினரை கவனம் கொடுத்து செயல்பட அறிவுறுத்துமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. மேலும் கனல் கண்ணன் மற்றும் S.J சூர்யா அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.