
ரத யாத்திரையால் வளர்ந்த கட்சி என்று பாஜக.,வை சுட்டிக் காட்டுவார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி முதலிய தலைவர்கள் நிகழ்த்திய ரதயாத்திரைகளின் பலனாக இன்று அக்கட்சி மத்தியில் வலுவுடன் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. பல மாநிலங்களில் பாஜக., செல்வாக்குடன் திகழ்கிறது.
அதுபோல் தமிழகத்தில் ஒரு மக்கள் யாத்திரை நடத்தி, மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் என்பது பாஜக.,வின் நெடுங்கால எண்ணம். அதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் தற்போதைய தலைவர் கே.அண்ணாமலை. இதற்காக பாஜக.,வினர் பெரும் முயற்சி எடுத்து தயாராகி வருகின்றனர்.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஜூலை 28ல் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதைத் தொடங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை தமிழக பாஜக.,வின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், திமுக., அரசு செய்யும் தவறுகளை கடுமையாக எதிர்கொண்டு சுட்டிக் காட்டுகிறார். திமுக., அமைச்சர்களின் ஊழல்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். அண்ணாமலை வெளியிட்ட திமுக., ஃபைல்ஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக., வினரின் சொத்துப் பட்டியல் இவ்வளவு பெரிதா என்று மக்கள் வாய் பிளந்தனர்.
இதை அடுத்து, திமுக., அரசின் ஊழல்களை வெளிப்படுத்தவும், மக்களின் ஆதரவைப் பெறவும், ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை. அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, உற்சாகப் படுத்தி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதைத் தொடங்கி வைக்க ராமநாதபுரம் வருகிறாராம்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பாஜக., மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். முதல் கட்ட யாத்திரை, ராமநாதபுரத்தில் தொடங்கி, சிவகங்கை, துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாகச் செல்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுதும் பாத யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் அண்ணாமலை பேசியபோது, பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாத யாத்திரையில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் 20,000 பேரை பங்கேற்க வைக்க வேண்டும். அதில் பொது மக்கள் 10,000 பேர் இருக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தினமும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.