ஆன்மிக வரலாறு திராவிட அரசியலால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
மதுரை என்றால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்பது உலக பிரசித்தி பெற்றது. அதிலும் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள். அதில் பெரும்பாலும் மதுரையை சுற்றி நடந்த நிகழ்வுகள். இறைவன் வந்து நடத்திய நிகழ்ச்சிகள் எத்துணை பெருமை வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வுகளை நினைவுபடுத்தி கொண்டாடும் வகையில் திருவிழாக்கள் காலம்காலமாக நடைபெற்றும் வருகிறது.
தை மாத தெப்பத்திருவிழா 8ஆம் நாளில் தெப்பக்குளத்தில் நடைபெறும் வலைவீசி திருவிழா. தற்போது அந்த குளத்தையும் அதன் அருகில் இருந்த காளக்கோவிலையும் ஆக்கிரமிக்கப்பட்டு காணவில்லை என மதுரை நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை இறைவன் திருவிளையாடல் புரிந்த புண்ணிய பூமி. ஆன்மிக வரலாற்று சுவடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்து கோவில்களை இந்து ஆன்மிக விழாக்களை இன்றளவும் திமுக தலைவர்கள் இழிவுபடுத்தி பேசி வருவதை பார்க்கிறோம்.
ஆன்மிக விழா என கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து மதுரைக்கு வருகிறார்கள்.இதன் மூலம் பல கோடி வருவாய் அரசுக்கு வருகிறது.
கோவில்களை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவில் குளத்தை, கோவிலை கானோம் என்றால் இதற்கு யார் காரணம்? கோவிலை திருக்குளத்தை தனியார் ஆக்கிரமிக்க அரசு அதிகாரிகள் துணைபோகின்றனர்.
ஊழலும் முறைகேடும் செய்து கோவில்களை அழிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு.
எத்தகைய பாரம்பரியமிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடந்த இடத்தை பராமரிப்பு இல்லாமலும் ஆக்கிரமிக்கவும் இடம் தந்தது வெட்கக்கேடான செயல்.
இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக திருக்கோவிலின் ஆன்மிக வரலாற்று இடங்களை பாதுகாக்க, பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக 64 திருவிளையாடல்கள் நடைபெற்ற அனைத்து இடங்களும் இன்றும் உள்ளது. அவற்றைக் கண்டு மீட்பது அரனைளையத்துரையின் தலையாய கடமை என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்