
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்குப் புறம்பாக பத்திரப்பதிவு செய்யப் படுவதாகவும் புகார்கள் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தன. இதை அடுத்து வருமான வரித் துறை அதிகாரிகள், சார் பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் 36 மாவட்டப் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். பதிவுத் துறையில் நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் பதிவாளர்கள் நிலையில் பணியிட மாறுதல்கள் செய்வதாக, தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது நிர்வாக காரணங்களுக்காக என்று சொல்லப்பட்ட போதிலும் பத்திரப் பதிவுத்துறையில் நிகழ்ந்து வரும் ஊழல் முறைகேடுகளை மத்திய வருமான வரித்துறை மோப்பம் பிடிக்கிறது என்ற காரணத்தினால் தான் என்பது இன்றைய வருமான வரித்துறை சோதனைகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.
இன்று வருமான வரி குறையினர் சென்னை அருகே உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட சென்னை பகுதியிலேயே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. பத்திரப் பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் வேலை செய்வதில்லை. கேமராக்கள் இருந்தாலும் அவற்றின் லென்ஸ்களில் மண்ணை தூவி படு ஜோராக லஞ்சம் முறைகேடுகளை நிகழ்த்தி வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மாலை அலுவலக நேரம் முடிந்தும் இரவு நேரத்திலும் பத்திரப்பதிவு படுவேகமாக நடந்து வருகின்றன என்றும், அவற்றுக்கு தனி கட்டணமும் லஞ்சமும் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வெறும் இரண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே 3000 கோடிக்கு கணக்கு காட்டப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் எவ்வளவு முறைகேடுகளும் லஞ்ச பணமும் பெருகி இருக்கும் என்று மக்கள் வாய் பிளக்கின்றனர்!