
உயர் நீதிமன்ற கிளையை மதுரையில் அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
மதுரையில் நகர் திமுக., சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இதில் அமைச்சர் வேலு பேசியபோது, கருணாநிதி 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 60 ஆண்டுகால சட்டசபை உறுப்பினர். வாழ்க்கையில் எந்த தேர்தலிலும் தோல்வியடையாத ஒரு தலைவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில் உள்ளதோ இல்லையோ குடிநீர் தொட்டிகளை ஏற்படுத்தினார். சென்னையை அடுத்து மதுரை மாநகராட்சி உருவாக கருணாநிதியே காரணம்.
கருணாநிதியே தனது எண்ணங்களை எடுத்துச் சொல்லி, போராடி, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச வைத்து, தென் மாவட்ட மக்கள் உயர் நீதிமன்றம் செல்ல சென்னைக்கு வருவதை தவிர்க்க உயர் நீதிமன்ற கிளையை மதுரையில் அமைத்துக் கொடுத்தார். இது அவர் போட்ட பிச்சை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கவும் அவரே காரணம். அவர்போல் ஸ்டாலின் செயல்படுகிறார்… என்று பேசினார்.
அவரது பேச்சு அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சை ஆனது. ஏற்கெனவே, பட்டியலினத்தவர்களுக்கு நீதிபதி பதவி என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி. இப்போது, நீதிமன்றமே கருணாநிதி போட்ட பிச்சை தான் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் திமுக., அரசின் அமைச்சர். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், எ.வ.வேலுவை கண்டித்தார். “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை தென்னக மக்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை என்று சொல்லியிருக்கிறார் எ.வ. வேலு. நீங்கள் நடந்தும் தொழில், வகிக்கும் அமைச்சர் பதவி, வாழும் வாழ்க்கை அனைத்தும் தமிழக மக்கள் போட்ட பிச்சை. மக்களிடம் ஊழல் செய்து அடித்து பிடுங்கி. பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் மக்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்வது அதிகாரத் திமிர், நாக்கொழுப்பு. எ.வ. வேலு மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பாஜக., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து வெளியிட்டார்.
இப்படி அமைச்சரின் பேச்சு சர்ச்சையான நிலையில், எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறிய போது, நீதிமன்றங்கள் மீதும், நீதித்துறை மீதும் மதிப்பு வைத்துள்ளேன். உணர்ச்சிப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வாறு பேசிவிட்டேன். உயர் நீதிமன்ற மதுரை கிளை மாவட்டத்திற்கு கிடைத்த கொடை என்பதற்கு பதிலாக வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. எனவே, நான் கூறிய வார்த்தையை திரும்பப் பெறுகிறேன்; அதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
– அதிவீரராம பாண்டியர் (வெற்றி வேற்கை)