
ஆளுநர் ஆகிவிட்ட நிலையிலும், இன்னமும் அரசியல் ஆசை விடாதவர் போல் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திப்பது, ஊடகங்களில் தலைகாட்டுவது என்று இருக்கும் முன்னாள் பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த கேள்விக்கு அவர் பெயரைச் சொல்லாமல், ஓர் அறிவுரை பதிலை அளித்தார் அண்ணாமலை.
தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு அழகாக ஒரு அறிவுரை சொல்லும் விதத்தில் பளிச்சென்று பதிலளித்தார். இது இப்போது சமூகத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தினமும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் திமுக.,வால் தாங்க முடியாது. தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் என்னைவிட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. திமுக.,வின் வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராகவே இருந்திருந்தாலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. கடமையைச் செய்ய வேண்டும்.
ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. ஆளுநர் அடிக்கடி செய்தியாளரைச் சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஆளுநர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும்… என்று, கோடிட்டுக் காட்டினார்.
மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியவை: பொது சிவில் சட்டம் என்பது அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். யாரையும் பிரிப்பதற்காக வரக்கூடிய சட்டம் அல்ல. ஒற்றுமைக்காகத்தான் பொது சிவில் சட்டம். அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை குறித்து பேசும் போது ஒரு நாட்டில் இரண்டு அல்லது மூன்று வேறு வேறு சட்டங்களை வைத்து கொண்டு ஒற்றுமையான நாட்டை உருவாக்க முடியாது என விளக்கம் அளித்திருந்தார்.
தண்ணீர் தர முடியாது என்று கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக., ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பாஜக., உறுதியாக உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையைக் கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால் தமிழக பாஜ., துணை நிற்கும் என்றார்.