spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசமையல் புதிது'பாயசம்’ - ஒரு தேசிய இனிப்பு!

‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!

- Advertisement -
  • தேவ்ராஜ்

இதிஹாஸப் புகழ் பெற்ற சிறந்த இனிப்பு; சக்கரவர்த்தியார் செய்த பெருவேள்வியின் பயனாகக் கிடைத்த பாயசம் பருகிய தேவியர் மூவரும் இதிஹாஸ நாயகர்களைப் பெற்றது உலகறிந்த நிகழ்ச்சி. உலகில் மாந்தர்தாம் தெய்வங்களுக்குப் படையல் தயாரிப்பர். தயரதன் தேவியர்க்கோ வானவர் பாயசம் தயாரித்து அனுப்பினர், வெள்ளி மூடியுடன்கூடிய தங்கப் பாத்திரத்தில் –

ததோ த₃ஶரத₂: ப்ராப்ய பாயஸம் *தே₃வநிர்மிதம்*,

ப₃பூ₄வ பரமப்ரீத:……

யாகங்களின் ‘சரு’ பிற்காலத்தில் பாயஸமாகப் பரிணாமம் பெற்றிருக்கலாம்.

இது இல்லாமல் பண்டிகை, விசேடங்கள் இல்லை;

நேபாளம் தொடங்கி பாரதம் நெடுகிலும் பல்வேறு பாயச வகைகள். வடபுலத்தில் இதற்கு ‘கீர்’ (க்ஷீர) என்று பெயர். கிழக்கு பாரதத்தின் சில பகுதிகளில் ‘காஜுர் கீர்’, பேரீச்சைப் பாயசம். தானியம் என வந்தால் கோதுமையை முக்கியமாகச் சாப்பிடும் வடபுலத்தவர்கூட பாசுமதி அரிசியில்தான் ‘கீர்’ தயாரிப்பர். பாதாம் பருப்புச் சேர்த்துத் தயாரிப்பது ‘பாதாம் கீர்’

பழந்தமிழ் இலக்கியம் புறநானூறும் பாயசப் பெருமை பகர்கிறது –

”பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து, மெல்லிது பருகி,

விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாக…. ”(புறம்)

என்று புலவர் நன்னாகனார் தாம் உண்ட விருந்திற் சுவைத்த பாயசச் சுவையை இலக்கியத்தில் அழியா இடம் பெறச் செய்துவிட்டார்.

வைணவர் ’திருக்கன்னல் அமுது’ (திருக்கண்ணமுது) எனும் தீந்தமிழ்ப் பெயரோடு பெருமாளைப் பாயசம் கண்டருளச் செய்வர். நாச்சியார் போற்றிய ப்ரஸாத வகை “அக்கார அடிசில்” பாலிலேயே அரிசியை வேக வைத்துத் தயாரிக்கும் சுவை மிக்க இனிப்பு!

கேரளச் சமையலில் பாயசம் ‘ப்ரதமன்’ எனும் பெயரோடு ப்ரதம ஸ்தானத்தில் நிற்கிறது; பழவகைகளாலும் பாயசம் தயாரிப்பர் கேரளத்தில், ‘பழ ப்ரதமன்’ என்று பெயர். அவர்கள் பலாப்பழத்தில் தயாரிக்கும் ‘சக்க ப்ரதமன்’ அலாதியான நறுமணமும், சுவையும் பொருந்தியது. பாலக்காட்டு பிராமணர்களின் புகழ்பெற்ற ’குறுக்குப் பால் பாயசம்’ தனி. வாசனைகள் சேர்க்க மாட்டார். பாலில் உள்ள இயற்கையான சுவையும், நறுமணமும் போதுமானவை. இதுதான் குஜராத்தின் ‘தூத்பாக்’ எனும் வாசனைகள் சேர்ந்த வடிவம். உடியாவில் கீர் ஸாகர்; வங்கத்தில் பாயேஷ். ரவா அப்பளம் சேர்த்த ‘அப்பி பாயஸ’ மாத்வ ஸ்பெஷல்.

‘பயஸ்’ (பால்) அடிப்படைகொண்டு உருவானது ‘பாயஸம்’. வடமொழி, பாயஸத்துக்கு ஆண்பால், பெண்பால், அலிப்பால் மூன்று வடிவங்களையும் அளித்துள்ளது. ‘பாயஸீ’ பெண்பால் வடிவம்., பாயஸம் ‘பயஸோ விகாரம்’ என்கிறது வாசஸ்பத்யம்.

காச்மீர வரலாற்றுக் கலாசாரக் குறிப்புகள் தருவது 7ம் நூற்0 முற்பட்ட ‘நீலமத புராணம்’. இதிலும் பாயஸம் பற்றிய செய்தி உள்ளது. சங்கதச் சமையற் குறிப்பு நூல் பாகராஜேச்வரமும் பாயஸம், செய்முறை, குணம், குறைகளைக் கூறுகிறது –

”அதப்ததண்டு₃லோ தௌ₄த: பரிப்₄ருʼஷ்டோ க்₄ருʼதேந ச।

க₂ண்ட₃யுக்தேந து₃க்₃தே₄ந பாசித: பாயஸோ ப₄வேத்। பாயஸ: கப₂க்ருʼத்₃ப₃ல்யோ விஷ்டம்பீ₄ மது₄ரீ கு₃ரு|”

(அரிசி, நெய், பால், சருக்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது; இனிமை- வலிமை தருவது, கபத்தையும் அதிகரிக்கச் செய்வது)

ஸ்ரீ குருவாயூர் அப்பனுக்கு நாள்தோறும் பாயஸ நைவேத்யம்; சேலத்திலிருந்துதான் சர்க்கரை போகிறது. முதலில் நாத்திகராகக் கம்யூனிச மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்த ‘மாதவன்’ என்ற இளைஞர் உறவினர் கட்டாயத்தால் கண்ணபிரானின் பாயசத்தை அருந்தியதால் தீராத வயிற்று வலி நீங்கப் பெற்றார்; இவரே பின்னர் பாகவத முழக்கம் செய்ய ஆரம்பித்து ‘ஆஞ்சம் மாதவன் நம்பூதிரி’ எனப் புகழ் பெற்றார். அடியேன் மும்பையில் வாழ்ந்த காலத்தில் இவரை தர்சித்துள்ளேன். குருவாயூரிலும் இவர் அடியேனுக்கு அவல் ப்ரஸாதம் வழங்கியுள்ளார்.

உடியாவின் ரேமுனாவில் கோவில்கொண்டிருக்கும் க்ஷீரசோர கோபீநாதன் பரமபக்தரான மாதவேந்த்ர புரீ ஸ்வாமிகள் ருசி பார்க்க வேண்டும் என்பதற்காகப் பாயஸ பாத்திரத்தை ஒளித்து வைத்து வழங்கியது மனத்தை நெகிழ்விக்கும் அரிய ஸம்பவம். கௌடிய வைணவர் இவ்வரலாற்றை வெகுவாகப் போற்றுவர்.

சிறார்களுக்குப் பாயசம் கொடுத்து ‘அந்நப்ராசநம்’ தொடங்குவர். ‘பாயஸாந்ந ப்ரியா’ அம்பிகைக்கான ஆயிர நாமங்களுள் ஒன்று. ஆய்க்குடி முருகன் ஆலயத்தில் ‘படிப் பாயசம்’ நிகழ்த்தி முருகனை வழிபடுவர்.

பித்ருக்களும், தேவர்களும், மனிதரும் பாயஸத்தால் பிரீதியடைகின்றனர்; அருமை பெருமைகள் நிறைந்த பாயசத்தை ‘பரமாந்நம்’ என்கிறது அமரம்.

பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு என்பதில் ஐயமில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe