
செந்தில் பாலாஜி சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்; அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றார் நீதிபதி நிஷா பானு! ஆனால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்ற பின் உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார்.
இப்படி இரண்டு விதமான தீர்ப்பு வந்ததால், மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப் பட்டது. இதனால் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 11ம் தேதி முதல் 3வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது நாளாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியதாவது:-
நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று 2-வது நாளாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதத்தில், “சட்டவிரோத பணப்பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் பேரில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டம். இந்த சட்டத்தின் கீழ் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது புலன் விசாரணையை பாதிக்கும் என்றார்.

மேலும், இந்த வழக்கில் ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணைதான். அமலாக்கத் துறைக்கு புலன் விசாரணை செய்ய அதிகாரம் கிடையாது எனக் கூற முடியாது. உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கையி்ல் ஈடுபடும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. 2005ம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் 350 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால் வங்கி மோசடி வழக்குகளில் மட்டும் இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மீட்கப் பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பாக சேகரிக்கப்படும் ஆதாரங்கள் ஆரம்ப கட்ட முகாந்திரம் தான். அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் தீர்வு காண முடியாது என்று வாதிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளது. இந்தச் சட்டத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும் என்பதாலும், ஜாமீனில் விட முடியாது என்பதாலும் அமலாக்க துறைக்கு காவல் துறையினருக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் சுங்கவரி சட்டம் போன்ற பிற சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை என்பதால் கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விட முடியும். அந்தச் சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல்துறையினருக்கான அதிகாரம் உள்ளது… என்று குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை. அவர் மீதான கைது நடவடிக்கை சரியானதுதானா? என்பதை நிரூபிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால் காவல் கோரியது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் அல்ல” என்று திட்டவட்டமாகத் தன் வாதத்தை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கார்த்திகேயன், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் வைத்தே அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அதேநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? எனவே அவர் மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்றக் காவலில் உள்ள நாட்களாகக் கருதக் கூடாது. அதேபோல தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோதக் காவலில் இல்லை என்பதால் ஆட்கொணர்வுமனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியதில் இருந்தே அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
முக்கியமாக, செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். ஆனால் நீதிபதி ஜெ.நிஷாபானுவின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால், இதுபோன்ற வழக்குகளில் இனி யாரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய வேண்டாம், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தாலே போதும் என்ற மனநிலைஉருவாகி விடும். பொதுவாக அனைவருடைய இதயத்திலும் 40 சதவீத அடைப்பு இருக்கும்” எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். இதன் பின்னர் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக விசாணையை இன்று ஒத்தி வைத்தார்.
அதன் அடிப்படையில் இன்று விவாதம் நடந்தது. இன்றைய விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமும் நடந்தது. மேகலா தரப்பில் ஆஜரான கபில் சிபல் அடுத்த விஷயத்துக்குப் போகும் முன்பு… மன்னிக்கவும் எனக்குக் கொஞ்சம் உடல் நலன் சரியில்லை என்று கூற, அதற்கு நீதிபதி கார்த்திகேயன், பரவாயில்லை கொஞ்சம் ஓய்வு எடுங்கள். நான் என்ன ஸ்கூலா நடத்துகிறேன். ஓய்வு எடுத்துவிட்டு 12.15க்கு வாருங்கள் என்றார்.
இந்த விவகாரம் சமூகத் தளங்களில் பெரிதாக நகைச்சுவையுடன் பகிரப்பட்டது. நெஞ்சு வலி பேஷண்டுக்கு வாதாடுகிற வக்கீலுக்கே நெஞ்சு வலி வந்தா அவர் எந்த நெஞ்சு வலி மருத்துவமனையில் சேர்ந்து தனக்காக வாதாட ஒரு நெஞ்சு வலி வக்கீலை நியமிப்பார்? என்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.