
பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நடத்தும் முகாமை புறக்கணித்து கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்காக தமிழக அரசால் அவ்வப்போது CRC கூட்டம் நடத்தப்படும். இதில் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது, பள்ளிகளை எப்படி நிர்வகிப்பது என்பதுடன், பள்ளிக்கல்வித்துறை குறித்த முக்கியமான செயல்பாடுகளுக்கான பயிற்சி முறைகளும் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக CRC கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் சாதாரண விடுப்பு கூட ஆசிரியர்களுக்கு பொதுவாக அனுமதிக்கப் படுவதில்லை.
இன்று (ஜூலை 22) திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சிஆர்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை சார்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கான கத்தோலிக்க சபை கூட்டம் பாளையங்கோட்டை மாதா மஹாலில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் அனைத்து கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என கத்தோலிக்க சபை நிர்வாகம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ: இந்துக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!
கத்தோலிக்க சபையின் இந்த உத்தரவுக்கு இணங்க, அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை பள்ளிகளைச் சார்ந்த நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர்கள் அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறும் சி ஆர் சி முகாமில் பங்கேற்காமல், கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இது அரசு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். மத ரீதியாக சி.ஆர்.சி கூட்டத்திற்கு விதிவிலக்கு வழங்குவது ஏற்புடையது அல்ல. வரும் காலங்களில் இதுபோல் அனைத்து ஆசிரியர்களும் அவரவர் வசதிக்கேற்ப சி ஆர் சி முகாமை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் அரசாங்கத்தின் செயல் திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும்.
இந்து ஆசிரியர்களுக்கு சாதாரண விடுப்புகூட எடுக்க அனுமதிக்கப் படாத நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சிஆர்சி பயிற்சி முகாமில் கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டது?
அரசு வழிகாட்டுதல் படி நடைபெறும் சிஆர்சி கூட்டத்தில் இன்று பங்கேற்காத கத்தோலிக்க சபை பள்ளி ஆசிரியர்கள் மீது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கல்வி நிர்வாகம் துறை ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் இது குறித்து விசாரித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.