
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், முக்கியமான இலக்கிய ஆளுமைகள், கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குளில் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன.
தினந்தோறும் மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மாலையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஜூலை 28 அன்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் சிறப்புரை, மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனின் அறிவியல் உரை, கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
ஜூலை 29 அன்று மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ் ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூலை 30-ல் கவிஞர் நந்தலாலா, வழக்குரைஞர் த.ராமலிங்கம் ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.
ஆக.1 அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா ஆகியோரின் உரைவீச்சு இடம்பெறுகிறது.
ஆக.2-ல் எழுத்தாளர் பவா.செல்லதுரை, எழுத்தாளர் நக்கீரன், முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஆக.3 அன்று கவிதா ஜவகரின் இலக்கிய உரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் கவியரங்கமும் நடைபெறுகிறது..
ஆக. 4 அன்று எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
ஆக.5 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்
நிறைவு நாளான ஆக. 6 அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவிதா ராமு, நடிகர் தாமு, எழுத்தாளர் விழியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை