
‘திமுக பைல்ஸ்’ 2ம் வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை ஆளுநரை சந்தித்து ஆவணங்களையும் அளித்தார்.
ஆளுநர் ரவீந்திர நாராயண ரவியை சந்தித்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, திமுக.,வினரின் சொத்துப் பட்டியல் அடங்கிய ஆவணங்களை அவரிடம் நேரடியாக ஒப்படைத்தார். பின்னர் ‘திமுக பைல்ஸ்’ 2ம் பகுதி வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார்.
DMK_Files_Part2 – திமுக.,வினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை ஜூலை 26 புதன் கிழமை இன்று வெளியிடவுள்ளதாகக் கூறியிருந்தார். அதன்படி, இன்று மாலை 3.30 மணி அளவில் அவர் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கே ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியைச் சந்தித்தார். அப்போது திமுக.,வினரின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அளித்தார். அவர் முன்னே ஒரு பெரிய டிரங்கு பெட்டி வைக்கப் பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இரும்புப் பெட்டி முழுவது ஆவணங்கள் அடங்கியிருப்பதாகக் கூறப்பட்டது.
இதன் பின்னர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநரிடம், திமுக., அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள், எம்பி.,க்கள் மற்றும் திமுக., முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக பைல்ஸ் பகுதி-2 ஆவணங்களையும், ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், தனது முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தவறி, தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைக் கண்டும் காணாமல் மௌனப் பார்வையாளராக இருப்பதால், டாஸ்மாக் இல்லாத தமிழகம் அமைப்பது குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்… என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஆளுநரிடம் அளித்த வெள்ளை அறிக்கை இங்கே...
பின்னர், ‘திமுக பைல்ஸ்’ பகுதி-2ன் வீடியோவை அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ: