
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னை- பெங்களூரு, சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்துக்கு மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையாக, சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலி வரை வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளும் தகவலை உறுதிப் படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே தமிழகத்துக்கான மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண நேரம் குறையும். இந்தத் தகவல் மதுரை, நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
