
சென்னையில் இன்று (செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது:
வரும் திங்கள்கிழமை (செப்.18) அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரசு பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.