
பாஜக.,வுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுக., அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக., மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும், மாநிலத்தில் பாஜக., உடனான கூட்டணியில் இருந்தும் விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, அதிமுக., தரப்பில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. பாத யாத்திரை தொடங்கும் முன் நடைபெற்ற ராமேஸ்வர்ம் கூட்டத்தில், அதிமுக தரப்பில் அதன் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த கே அண்ணாமலையுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வருவதாக அப்போதே விமர்சனங்கள் விழுந்தன. அண்ணாமலையின் அபாரமான வளர்ச்சி அதிமுகவுக்கு பெரும் புகைச்சலை கொடுத்தது.
இந்நிலையில் அதிமுக., பாஜக., இரு கட்சிகளில் இருந்தும் அண்மைக் காலமாக கசப்புணர்வூட்டும் பேச்சுகளை பொதுவெளியில் பகிரங்கமாகப் பேசி வந்தனர். இதனால், இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக., மூத்த தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அண்ணாதுரை குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து தங்கள் தலைவரை குறித்து அவதூறு என்று அதிமுக அறிவித்தது. மேலும் பாஜக.,வுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் கட்சித் தலைமை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக.,வுடன் கூட்டணி வேண்டாம் என பல நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலின்போது கூட்டணி பற்றி பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு வேண்டாம் என ஒருசிலர் கூறியுள்ளதாக தெரிகிறது.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் அடிப்படையில் பாஜக., கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார். இந்நிலையில் அதிமுக தரப்பில் இருந்து, எவர் கையெழுத்தும் இடாமல், பொதுவாக தலைமைக் கழகம் என்று குறிப்பிட்டு, ஓர் அறிக்கை வெளிவந்தது. அதில்…
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே வேண்டுமென்றே. உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
– தலைமைக் கழகம்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, தே.ஜ., கூட்டணியில் உள்ள பாஜக.,வின் மாநில தலைமை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அதிமுக., மீதும், அண்ணாதுரை, ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியும், கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது. இது கோடிக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், பாஜக., உடனான கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2024 தேர்தலில் பழனிசாமி தலைமையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தக் கூட்டத்திற்கு நடுவே வெளியே வந்த மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம், கூட்டணி இல்லை என சைகை காட்டியபோது, அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணியின் பெயரை மாற்றி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர் அச்சடித்து தேர்தல் அலுவலகத்தை அதிமுக திறந்தது. அப்போது பாஜக பெயரோ பாஜக தலைவர்கள் எவர் படமும் அதில் இடம்பெறவில்லை. அப்போதே கூட்டணி குறித்து பரவலாக பேசப்பட்டது. மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போதும் சரி, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சரி அதிமுக தங்களுக்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை மாறாக எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக பாஜகவினரின் மத்தியில் ஏற்பட்டது. 2021 இல் திமுக ஆட்சியில் அமர்வதற்கும் ஸ்டாலின் முதலமைச்சராகி தமிழகம் இத்தகைய சீர்கேடுகளுக்கு உள்ளாகி இருப்பதற்கும் காரணம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் என்ற எண்ணம் பாஜக தொண்டர்களிடையே வலுவாக இருந்தது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் வரும் தேர்தலிலும் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறாது என்ற எண்ணம் பாஜக தொண்டர்களிடம் இருந்தது.
இப்படி இருதரப்பு தொண்டர்களின் கசப்புணர்வுகளுக்கு மத்தியில் கூட்டணி எப்படி தொடர போகிறது என்று எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருந்தது இந்நிலையில் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்திருக்கிறது.