
வடகிழக்கு பருவமழை தொடங்கியது !
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தமிழகம், புதுச்சேரி யூனிய்ன பகுதி, கேரளப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியிருப்பதால் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இருப்பினும், பொதுவாக வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டம் பலவீனமாகவே இருக்கும்.
அரபிக் கடலில் புயல்
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 24 கிமீ மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, “தேஜ்” சூறாவளியாக வலுவடைந்து, அதே பகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி காலை 0530 மணிக்கு மையம் கொண்டிருந்தது. “தேஜ்” புயல் 9.9° வட அட்சரேகை மற்றும் 59.4° கிழக்கு தீர்க்கரேகை புள்ளியில், ஏமன் நாட்டில் உள்ள சோகோட்ரா என்ற இடத்தில் இருந்து சுமார் 670 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும் (Severe Cyclonic Storm) அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் (Very Severe Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்புள்ளது. இது 22ஆம் தேதி காலை வரை மேற்கு-வடமேற்கு நோக்கியும், அதன்பிறகு 24ஆம் தேதி காலை வரை வடமேற்கு நோக்கியும், பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கியும் நகர வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலையில் அல் கைதா (ஏமன்) மற்றும் சலாலா (ஓமன்) இடையே ஏமன்-ஓமன் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்தப் புயலால் இந்தியப் பகுதிகளுக்கு பாதிப்பில்லை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் புயல் பகுதியை தவிர்க்க வேண்டும்.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) 21 அக்டோபர் 2023 காலை 0530 மணிக்கு தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் நளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இது புயலாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இன்று சில நாளிதழ்களில் குறிப்பிட்டுள்ளது போல புயல் உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளது.
தமிழகத்தில் மழை
தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த மழை தொடர வாய்ப்பு குறைவாக உள்ளது.
குமரிக் கடல் பகுதி மற்றும் சுற்றுப்புறத்தின் கீழ் மற்றும் நடுத்தர மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.