
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
16ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
பெங்களூரு – 20.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி (367/9, வார்னர் 163, மிட்சல் மார்ஷ் 121, ஷாஹீன் ஷா அஃப்ரிடி 5/54, ஹாரிஸ் ராவுஃப் 3/83) பாகிஸ்தான் அணியை (45.3 ஓவரில் 305, இமாம் உல் ஹக் 70, ஷஃபிக் 64, ரிஸ்வான் 46, ஷகீல் 30, சாம்பா 4/53, ஸ்டொயினிஸ் 2/40, பேட் கம்மின்ஸ் 2/40) 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால் அந்த அணியின் அந்த முடிவு அந்த அணிக்குச் சாதகமாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களான பவர்ப்ளே ஓவர்களில் ஆஸ்திரேலிய தொடக்கவீரர்கள் வார்னர், மிட்சல் மார்ஷ் இருவரும் 82 ரன்கள் அடித்தனர். வார்னர் 10 ரன்னில் இருக்கும்போது ஒரு சுலமான கேட்சை பிடிக்க பாகிஸ்தான் அணி தவறியது.
33.5ஆவது ஓவரில் மார்ஷ் ஆட்டமிழக்கும்போது அவர் வார்னருடன் சேர்ந்து 259 ரன் சேர்த்திருந்தார். வார்னர் இதற்கு முன்னர், உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இதே போன்ற மூன்று பார்ட்னர்ஷிப் ரிகார்ட் வைத்திருக்கிறார் என்பது தனிக்கதை.
வார்னர் 44.2ஆவது ஓவரில் நாலாவது பேட்ஸ்மெனாக ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 325. அதன் பின்னர் அடுத்த ஐந்து ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அவர்கள் சரியாக ஆடியிருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 400ஐத் தாண்டியிருக்க வாய்ப்பிருந்தது.
பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கடைசி ஐந்து ஓவர்களில் வீசிய துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 367 ரன் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தனது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியபோது அதன் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் ஷஃபீக் இருவரும் நன்றாக ஆடினர். ஆயினும் பவர்ப்ளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 59 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.
பாகிஸ்தான் அணி பந்து வீசும்போது நாலு கேட்சுகளைத் தவற விட்டனர். ஆஸ்திரேலியா பந்து வீசும்போது அபோட் முதல் கேட்சைத் தவறவிட்டார். பின்னர் இமாம் உல் ஹக் 48 ரன்னில் இருக்கும்போது மார்ஷ் ஒரு கேட்ச் தவறவிட்டார். அச்சமயத்தில் ஸ்டொயினிஸ் இரண்டு தொடக்க வீரர்களின் விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.
அதன் பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் பாகிஸ்தான் அணிக்கு ஏற்படவில்லை. எனவே 45.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளயும் இழந்து அந்த அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சாம்பா தொடர்ந்து இரண்டாவது முறையாக நாலு விக்கட்டுகள் எடுத்தார்.
வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கவுள்ளன.
முதல் ஆட்டம் லக்னோவில் இலங்கை-நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடக்கிறது.
இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே மும்பையில் நடக்கவுள்ளது.