
புவனேஷ்வரப் பயணம்
பகுதி 1 – பயணத்திட்டம்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய வரலாற்றில் நாம் படிக்கின்ற முதல் பேரரசு “மௌரியப் பேரரசாகும்”. என்னுடைய பள்ளி நாட்களில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அவர்களின் சாணக்கியர் பற்றிய நாடகத்தை நான் வானொலியில் கேட்டிருக்கிறேன். பின்னாளில் அதே நாடகம் சென்னை பொதிகை சானலில் ஒளிபரப்பானது. அதற்குப் பின்னர் ஷாருக் கான், அஜித் நடித்த அசோகா என்ற திரைப்படம் அசோகரின் வாழ்க்கையைப் பற்றி சிறிது சொல்கிறது. தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில் ஹிந்தி படிக்கும்போது அசோகர் பற்றிய துணைப்பாடப் புத்தகம் இருந்தது. அதிலே (அது ஒரு கற்பனையான புத்தகம்) அசோகரைப் பற்றிய நான் அறியாத செய்திகள் இருந்தன.
நான் வரலாற்றில் முதுகலைப் படிப்பு படிக்கும்போது, இந்திய வரலாற்று மூலங்கள் என்பது முதல் பாடமாக இருக்கும். அதில் ஹாதி கும்பா கல்வெட்டு, அய்ஹோல் கல்வெட்டு எனப் பண்டைக்கால கல்வெட்டுக்கள் குறிப்பிடப்படும். எனக்கு இந்த கல்வெட்டுக்களைக் காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே புவனேஷ்வரம் செல்ல ஒரு பயணத்திட்டம் தயாரித்தேன். 2017இல் ஒரு முறை ஒன்பது நாட்கள் விடுமுறை தொடர்ந்துவந்தது. அதிலே குடும்பத்தோடு புவனேஷ்வரம் செல்லத் திட்டமிட்டேன்.
சென்னையில் இருந்து புவனேஷ்வரம் வரை விமானப் பயணம். புவனேஷ்வரத்தில் இருந்து கார் மூலம் புவனேஷ்வர நகரச் சுற்றுலா, பூரி, கொனார்க், சில்கா ஏரி, மீண்டும் புவனேஷ்வரம். பின்னர் புவனேஷ்வரத்தில் இருந்து சென்னை விமானப் பயணம். இதுதான் என்னுடைய பயணத்திட்டம்.
சென்னையில் இருந்து புவனேஷ்வரம் செல்லும் இண்டிகோ விமானம், முதலில் விசாகப்பட்டினத்தில் இறங்கும். அங்கே அரை மணி நேரம் நிற்கும். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் பயணிகள் இறங்குவார்கள். அதன் பின்னர், விமானத்தில் அமர்ந்திருப்பவர்களின் பயணச்சீட்டு சோதித்துப் பார்க்கப்படும். அதாவது புவனேஷ்வரம் செல்பவர்கள் மட்டுமே விமானத்தில் இருக்கிறார்களா என சோதிக்கப்படும். அதன் பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து புவனேஷ்வரம் செல்பவர்கள் ஏற்றப்படுவார்கள். பின் புவனேஷ்வரத்திற்கு விமானம் புறப்படும்.
விமானம் காலை 0930 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வரத்திற்கு சுமார் 1130 மணிக்கு வந்து சேரும். இடையில் சிற்றுண்டி எதுவும் வழங்க மாட்டார்கள். தேவைப்பட்டால் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி எனக்கு ஏற்கனவே அனுபவம் இருந்ததால், சாப்பிடுவதற்கு கையில் பிஸ்கட், மிக்சர், போன்றவை வைத்திருந்தோம்.
புவனேஷ்வரம் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் முன்னரே ஏற்பாடு செய்திருந்த கார் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தது. அதில் ஏறி, புவனேஷ்வர் நகரத்தின் மத்தியில் ஒரு ஹோட்டலில் ஒரு அறை எடுத்துத் தங்கினோம். மதிய உணவு அங்கேயே சாப்பிட்டோம். மாலை 0300 மணிக்கு உதயகிரி, சந்திரகிரி செல்வதாக முடிவுசெய்திருந்தோம்.
என்னுடைய பல நாள் கனவான ஹாதிகும்பா கல்வெட்டைப் பார்க்க மாலை செல்லவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் சற்று உறங்கினேன்.