
தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக., கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக.,வின் கொடிக்கம்பத்தை போலீசார் பெரும் அமளிதுமளிக்கிடையே அகற்றினர். அப்போது பாஜக., தொண்டர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டு, காயமடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்….
கொடி காக்க போரிட்டவர்கள் மீது அதிகார அத்துமீறல், திமுக ஸ்டாலின் ஆட்சியின் தொடரும் கைதுகள் !
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை காலில் போட்டு மிதித்து சர்வாதிகார போக்குடன் திமுக அரசு செயல்படுகிறது. அரசும், அரசு ஊழியர்களும், ஆளும்கட்சியும் சர்வாதிகார மனப்பான்மையில் செயல்படுகின்றனர்.
நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய வீட்டின் முன்பு ஏற்றப்பட்ட கொடி வலுக்கட்டாயமாக பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறது. அதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போரிட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்ட ஒரு 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பாக என் மன்னன் என் மக்கள் நடை பயணத்தின் இணை அமைப்பாளராக செயல்பட்ட திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எந்த ஒரு கட்சித் தொண்டனும் தனது கட்சியினுடைய கொடி, கொடிமரம் என்பதற்காக உயிரையும் துச்சமாக கருதி போராட முன் வருவான். அந்த வகையில் தங்களது கட்சியின் கொடிக்காக போராடிய பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதற்காக பொய் வழக்கு போட்டு தலைவர்களை கைது செய்வதென்பது அரசின் கையாலாகாத தனத்தை தெளிவுபடுத்துகிது.
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநிலச் செயலாளர் உட்பட பல பொறுப்பாளர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டது.
கருத்து சுதந்திரத்தை எதிர்கொள்ள திராணி இல்லாத திமுக அரசு, தற்போது நடைபெற்று வருகின்ற பாஜகவின் என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு பெருந்திரளாக மக்கள் கூடுவதைக் கண்டும் அச்சப்படுகிறது . அதன் வெளிப்பாடு தான் இந்த அதிகார துஷ்பிரயோக, அநியாயச் செயல்.
சர்வாதிகார பாசிச மனப்பான்மை நீடித்ததாக சரித்திரமில்லை. மக்கள் விரோத அரசாங்கம் மக்களால் தூக்கியெரியப்படும்.
காவல்துறையின் இந்தச் செயல்பாடு திமுக குடும்பத்திற்கு காலம்காலமாக கொத்தடிமையாக, விசுவாசமாக இருக்கும் கீழ்நிலை மனிதனின் செயல்பாடாக தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
இது போன்ற செயல்கள் தமிழக ஜனநாயகத்தின் இருண்ட காலமாக வருங்காலத்தில் குறிப்பிடப்படும் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது…. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டையில் உங்கள் கொடி பறப்பதால் – திமுக அரசுக்கு என்ன ஆணவமா? அண்ணாமலை இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தை போலீசார் மூலமாக தமிழக அரசு அகற்றியுள்ளனர். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒரு கொடிக் கம்பத்தை அகற்றினால் பல ஆயிரம் கொடிக் கம்பங்கள் வரும் காலங்களில் நடப்படும். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று எண்ணிக் கொள்ளுமாம். அதுபோல ஒரு கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டதால் பாஜக.,வின் வளர்ச்சியை கனவிலும் தடுக்க முடியாது என்பதை இந்த போலி திராவிட மாடல் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ஒரு நாளுக்கு நூறு என நூறு நாள்களில் பத்தாயிரம் பாஜக., கொடிக்கம்பங்கள் நடப்படும், இதே பனையூரில் பத்தாயிரத்து ஓராவது கொடிக்கம்பம் நடப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அவரது பதிவு:
குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.