
5. ஹாதிகும்பா கல்வெட்டும் வரலாறும்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஹாத்திகும்பா கல்வெட்டு (Hathigumpha inscription) பற்றி முன்னரே பார்த்தோம். இது அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட ஹாதிகும்பா கல்வெட்டு உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழைமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165ஆம் ஆண்டு என்றும், காரவேலன் மன்னரின் 13ஆம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.
ஹாதிக்கும்பா கல்வெட்டுகள் தான் கலிங்க மன்னர் காரவேலன் பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும், எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து என்ற வரலாற்றாசிரியர்.
இந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825இல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார். பின்னர் கிட்டோ கண்ணால் பார்த்து எழுதியதை ஜேம்ஸ் பிரின்செப் 1837இல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871இல் எச். லாக் என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880இல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).
இந்தக் கல்வெட்டை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான வடிவத்தை வெளியிட்ட பெருமை வரலாற்றாளர் பகவன்லால் இந்திராஜி என்பவரையே சேரும். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் காரவேலர் என்பதை முதன்முதலில் அவர்தான் 1885இல் ஆறாவது பன்னாட்டுக் கீழைநாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Sixth International Congress of Orientalists) அறிவித்தார். மேலும் பல ஆய்வுப்பதிப்புகளுக்குப் பிறகு 1930இல் ஓரளவுக்கு நிறைவான பதிப்பை ஜெயசுவாலும் பானர்ஜியும் வெளியிட்டனர்.
இந்தப் பதிப்பின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பேரா. பருவா தனது ஆய்வை 1938இல் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேரா. சர்க்கார் தனது ஆய்வைப் பதிப்பித்தார். பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி முற்றிலும் புதிய பார்வையில் தனது ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார் சசிகாந்து.