
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் நவ.19 மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.
செங்கோட்டை வடக்குரதவீதி அப்பாமாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் வைத்து தென்காசி மாவட்ட ராஷ்ட்டிரீய ஸ்யம் சேவக சங்கம் சார்பில் 98 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தப் பேரணியில் முழு சீருடையுடன் 230 தொண்டர்கள் பங்கேற்றார்கள். பேரணியானது வடக்குரதவீதி, கீழ ரதவீதி, கேசி ரோடு, வண்டிமலச்சியம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது. இந்தப் பேரணி அமைதியாக நடைபெற்றது. பொது நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமாகக் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமத்தின் ஸ்வாமி அகிலானந்தா ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கன்யாகுமரி பகுதி செயலர் ஜோதீந்திரன் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில், “நம் நாட்டின் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கல்வி, செல்வ வளம் இருந்தது. அதை வெளிநாட்டினர் வந்து கொள்ளை அடித்தார்கள். இது சுதந்திரமடைந்த பின்னும் தொடர்ந்தது. ஆனால், கடந்த பத்து வருடத்தில் ஒரு ஸ்வயம்சேவகர் பொறுப்பில் அமர்ந்த பின், எத்தகைய மாற்றங்களை நாம் காண்கிறோம். காரணம், ஆள்பவர்களின் அர்ப்பணிப்பு. வேலையில் உறுதி. அதிகாரத்தின் மூலம், உலகின் குருவாய் பாரதம் மாறுவதை நாம் கண் முன்னே பார்க்கிறோம்.
ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்காவையும் இணைத்து, எளியோரையும் அரவணைத்தோம். அதுதான் நம் சனாதன தர்மம் கற்றுக் கொடுத்தது. சனாதனம் என்றால் என்ன? அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டிதான் சனாதன தர்மம். வசுதைவ குடும்பகம் என்பதை நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். சதுர் வர்ணம் என்று சொல்லி வைத்தார்கள் என்றால், அது தொழிலின் அடிப்படையில்.
நம் நாட்டில் செல்வ வளம் இருந்ததால் தான் கஜினி முகமது படையெடுத்து ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துக் கொண்டு போனான். கல்விச் செல்வம் தழைத்தோங்கி இருந்ததால் தான், இந்த நாட்டின் கல்வி முறையை ஆங்கிலேயன் வந்து அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்றினான்.
இப்போது சிலர் சொல்வது போல் ஆங்கிலேயர் வந்துதான் கல்வி கொடுத்தான் என்பது எவ்வளவு கொடுமை. நாம் நம்மை உணர வேண்டும். நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர வேண்டும். பாரதம் உலகின் குருவாய் ஆகும்!” என்று பேசினார்.
மாவட்ட பொறுப்பாளர் இரா.முருகேசன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தொண்டா்கள், இந்து முன்னனி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனா்.