
லட்சக் கணக்கானோருக்கு கண் பார்வை கிடைக்க அரும்பாடுபட்ட ‘சங்கர நேத்ராலயா’ அமைப்பின் நிறுவனர் டாக்டர். எஸ்.எஸ். பத்ரிநாத் தமது 83வது வயதில் செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.
45 வருடங்கள் முன்பு சங்கர நேத்ராலயாவைத் தொடங்கியதன் மூலம், லட்சக்கணக்கான மக்கள் பார்வை மீளப் பெற்று, பயனடைந்து வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநில மக்கள் சங்கர நேத்ராலயாவினால் அதிகம் பயனடைந்துள்ளனர்.
தனது திறமைகள் அனைத்தையும் சமுதாய நலனுக்காகவே அர்ப்பணம் செய்தவர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத். பெரும் தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை முதலில் சென்னையில் நிறுவியவர் டாக்டர் பத்ரிநாத். இவர் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978ல் இந்த அமைப்பை நிறுவினார். ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் போது, கண் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டு, அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் 1962ல் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் செய்தார். பின்னர், அவர் கண் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1978ம் ஆண்டில், காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடனும் வழிகாட்டலிலும், டாக்டர் பத்ரிநாத் மற்றும் சமூக சேவகர்கள் குழுவினர் சென்னையில் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். காஞ்சி சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் வடகிழக்கு மாநிலங்களிலும் சங்கர நேத்ராலயாவின் சேவை நீண்டது.