விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விதிமுறைகளை மீறி உயர் அதிகாரியின் அனுமதியின்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ஒரு கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த 5 பேரை பொருளதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் உட்பட 2பேரிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ். இவரது தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்களில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கணக்கை தணிக்கை செய்த போது, அதில் 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ரூ.1 கோடிக்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சங்க பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சங்க முன்னாள் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் 8 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில், இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2020-21ம் நிதியாண்டில் கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு விளம்பரம் செய்தல், இதர செலவு வகை கணக்குகள் அடிப்படையில் உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமலேய கூட்டுறவு சங்க நிதி ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கையாடல் நடைபெற்றது உறுதியானதாம்.
இதில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான இராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த முருகேசன் (63), பராசக்தி நகரை சேர்ந்த ராஜலிங்கம் (47), தளவாய்புரத்தை சேர்ந்த பொறுப்பு தலைவர் தங்க மாரியப்பன் (53), இராஜபாளையம் ஆனையூர் தெருவை சேர்ந்த கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் (61), சம்மந்தபுரத்தை சேர்ந்த காளிராஜ் (56) ஆகிய 5 பேரை பொருளதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத் வருகின்றனர். இதில், வனராஜ் அ.தி.மு.க.,வில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.