நெல்லை புத்தகத் திருவிழாவா ? திமுக திக கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னணி அமைப்பு, தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் இது குறித்துக் கூறுகையில்,
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
ஆனால் 2024 நெல்லை புத்தகத் திருவிழா திமுக திக மற்றும் கம்யூனிஸ்டுகளின் பிரச்சார மாநாடு போல நடைபெற்று வருவது வேதனைக்குரியது. இதற்கெல்லாம் மேலாக இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.
நேற்று முன்தினம் நெல்லை புத்தகத்திருவிழாவில் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு என்பவர், இந்து மதத்தை தரக்குறைவாகவும் சனாதன தர்மம் குறித்து பொய்யான செய்திகளையும் சொல்லி விமர்சித்து பேசியுள்ளார். இது போல வேற்று மதத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை பேச சந்துரு பேசியிருந்தால் பெரிய பிரளயமே உருவாகியிருக்கும்.
ஒரு மதத்தை அதன் பாரம்பரியத்தை அரசு விழாவில் விமர்சித்துப் பேசுவதை மாவட்ட நிர்வாகம் எப்படி வேடிக்கை பார்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. புத்தகத் திருவிழா என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் விழா.
திமுக., திக., கம்யூனிச பேச்சாளர்கள் பஞ்சம் பிழைக்கும் மேடையாக புத்தகத் திருவிழா மாறியது தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
தமிழும் இந்து சமயமும் ஒன்றோடு ஒன்றி பின்னிப் பிணைந்தது. தமிழால் இந்து மதமும், இந்து மதத்தால் தமிழும் வளர்ந்தது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் பக்தி இலங்கியங்கள் குறித்த எந்த சொற்பொழிவும் நிகழ்ச்சியும் 2024 நெல்லை புத்தக திருவிழாவில் இடம்பெறவில்லை என்பதிலிருந்தே புத்தக திருவிழாவில் ஆளும் அரசியல் ஆதிக்கத்தை உணர முடிகிறது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் புத்தகத்தில் திருவிழாவில் நன்றியுரை கூறும் அளவிற்கு புத்தக திருவிழா அரசியலாகி போனது வேதனை அளிக்கிறது.
இனி வரும் காலங்களிலாவது அரசியல் சார்பில்லாத, இந்து வெறுப்புணர்வை தூண்டாத பேச்சாளர்களை வைத்து புத்தகத் திருவிழாவை கண்ணியம் குறையாமல் நடத்திட மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட இந்துக்கள் சார்பில் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது, என்றார் கா.குற்றாலநாதன்.