hindumunnani

நடிக்காதீங்க, திமுக., இந்து விரோத கட்சின்னு சின்ன குழந்தைக்குக் கூட தெரியும்!

சற்றுமுன் Featured அரசியல் தமிழகம் லைஃப் ஸ்டைல்
hindumunnani - 2026

முதல்வரே நடிக்க வேண்டாம். இந்து விரோத திமுக என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவையும் தன்னையும் இந்து மத விரோதியாக சித்தரிக்க எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் தான் முதல்வர் ஆன பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அரசு விழாக்களில் தான் அதிகம் கலந்து கொண்டதாகவும், ஐயாயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை தனது அரசு மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஆன்மீக அடையாளமாக இருப்பது திருவண்ணாமலை கோவில் என்று பேசிய முதல்வர் அவர்களே  திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அடித்தளம் அமைத்து கோயில் கோபுரத்தை மறைக்க பார்த்தார்களே, பக்தர்கள் போராடியும் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தீர்களே இதுதான் முதல்வர் இந்து மதத்தை ஆதரிக்கும் முறையா? 

 300 ஆண்டு பழமையான அம்மணி அம்மாள் மடத்தை இந்து சமய அறநிலையத்துறையே இடித்து தள்ளி அழித்தது தான் முதல்வரின் சீரிய நிர்வாகமா? இதுதான் கோயிலை காக்கும் திராவிட மாடல் ஆட்சியா? 

 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை மீட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவர்களே கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்புக்கு போனது எப்படி?  எந்த ஆட்சியில், எவர் ஆட்சிகாலத்தில் யார் ஆக்கிரமித்தார்கள் என்று சொல்வாரா?

 பக்தர்கள் போற்றும் திராவிட மாடல் அரசாங்கம் அற்பர்கள் கதறும் திராவிட மாடல் அரசாங்கம் என்று எதுகை மோனையோடு பேசும்  முதல்வருக்கு ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழனி என பழமையும் புகழும் பெற்ற திருக்கோவில்களில் எல்லாம் பக்தர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ரத்தம் சிந்தி துடித்தார்களே அதுதான் பக்தர்கள் போற்றும் திராவிட அரசாங்கமா? 

  ஓராண்டு காலமாக மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் சீல் வைத்து பூட்டபட்டுள்ளதே கோவிலை திறக்க பிரச்சனயை முடிக்க முதல்வர் தலைமையிலான அரசு சிறு தீர்வையும் முன்னிறுத்தாமல் கோயிலை தொடர்ந்து சீல் வைத்து பூட்டி வைத்திருப்பதுதான் முதல்வரின் கோவிலை காக்கும் திராவிட மாடல் அரசாங்கமா? 

 முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகமெங்கும் கிட்டதட்ட ஆயிரம் கோயில்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடித்து தள்ளி அழிக்கப்பட்டதே.! இதுதான் முதல்வர் பெருமையாக மார்தட்டும் கோவில் சொத்து மீட்பா? 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும் அமைச்சருமான  உதயநிதி அவர்கள் கிறீஸ்தவ மிஷனரிகளின் விழாவில் கலந்துகொண்டு சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா கொசு போன்று ஒழிக்கவேண்டும் என்று பேசினாரே, ஊரெல்லாம் வழக்கு வாங்கி உச்ச நீதிமன்றத்திலே முறையிட்டு காத்திருக்கிறாரே! அந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டாரே அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத முதல்வர்தான் இந்து மத ஆதரவாளார? 

 முதல்வர் ஸ்டாலின் அவர்களே தாங்கள் இஸ்லாமிய திருமண விழாவில் காலந்து கொண்ட போது இந்து திருமண சடங்கு சம்பிரதாயங்களை மிகவும் தரம் தாழ்ந்து பேசி இழிவுப்படுத்தி பேசினீர்களே அதுதான்  இந்து மத ஆதரவா? 

 தேர்தல் வந்தால் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என்றும் என் கட்சியில் 90 % இந்துக்கள் என்று அறைகூவல் விடுத்து அப்பாவி இந்துக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்து மதத்தை ஒழிப்பேன் சனாதனம் கொசு என்பதும் முதல்வர் மற்றும் திமுகவின் வாடிக்கை என்ற நிலையில் வேறு யாரும் முதல்வரையும் திமுகவையும் இந்து மத விரோதியாக சித்தரிக்கவில்லை. திமுகவைச் சார்ந்தவர்களே ஏராளமான முறை இந்து மத விரோதிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். 

 எனவே தேர்தலுக்கு தேர்தல் இந்து மத ஆதரவாளர்களாக மாறும் திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்த நேரத்தில் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.