
தமிழனின் உயிர் மலிவு விலையா? தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் தடம் மாறி போகிறது தமிழகம் என்று குறிப்பிட்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து, இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி த. மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகம் போதையில் தடுமாறும் நிலைக்கு டாஸ்மாக் தமிழர்களை சீரழித்தது. டாஸ்மாக் சரக்கில் விழுந்த தமிழன். விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் தான் இதிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.
கடந்த வருடம் கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு அதிலும் அந்த விஷ சாராயத்தை விற்ற அயோக்கியனுக்கும் அரசு பத்து லட்சத்தை வாரி வழங்கியது. உண்மையில் இது மனிதாபிமான அடிப்படையில் என்பது சரி. ஆனால் இதனால் கள்ள சாராய விற்பனை, போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராய சாவு ஏன்? என்று தமிழக அரசு சிந்தித்ததா? இல்லையா எனத் தெரியவில்லை? தமிழனின் உயிர் மலிவு விலையாகிபோனது.
இப்போதும் அரசு நல நிதி தரலாம். இதனை மனிதாபிமான அடிப்படையில் என ஊடகமும் அரசியல் கட்சிகளும் பசப்பலாம். இவை எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்ப நடக்கும் நாடகம்.
கள்ள சாராயம் எங்கு விற்றார்கள்? காவல்துறை, கள்ளக்குறிச்சி கோர்ட், கலெக்டர், அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அருகிலேயே என கூறப்படுகிறது. இது உண்மையானால், இது எத்தகைய வெட்கக்கேடான விஷயம். மனித உயிர்கள் போன பின்பு நடவடிக்கை எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகம்.
இவர்களை போதையில் தள்ளியது யார்? நேற்று திமுக கொடியுடன் சென்னையில் சாலையின் நடுவில் போதையில் மட்டையான இளைஞன் காரில். இதுபற்றி திமுக வாயை திறந்ததா? முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அவர்களுக்கு இது தெரியுமா? அவரோ மர்மயோகி போல் ஆட்சி நடத்துகிறார் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், உழைக்கும் இளைஞர்கள் இன்று பெருமளவில் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது வேதனையான உண்மை.
இதற்கு முக்கிய காரணம் போதையை ஏற்றும் டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹால் அதிகம். அது குடிப்பவனை உடனே அது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவரால் குடிக்காமல் இருக்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் கடையை நடத்துவது தமிழக அரசின் பணியா?
பீகாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீளமுடியாத அளவு போதையில் போகிறது. காரணம் மது ஆலைகளை நடத்துவது அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள். இவர்களால் தமிழகம் சீரழிந்து வருகிறது.
இந்த அவல நிலையை போக்க மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போராட முன்வர வேண்டும். வருங்கால சமுதாயத்தை காப்பாற்ற போதை எனும் அரக்கனை ஒழிக்க வேண்டும்.
தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டம் தோறும் திறந்தாக வேண்டியது அவசியமாகிறது.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டுமானால் முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்கு தீர்வு தராது.
எனவே முழுமையான போதை பொருள், கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.





