ரெட்ஜெயண்ட் மூவிஸ் விநியோகத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட நெல்லை தியேட்டரில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டர் வளாகத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை அதிகாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்த தகவல் கிடைத்ததும், சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நெல்லையில் பரபரப்பு நிலவியது. இதனிடையே நெல்லை மாநகரில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் அலங்கார் திரையரங்கில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் திரையரங்கை பார்வையிட்டு உரிமையாளருக்கு ஆறுதல் கூற வந்த இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் கொட்டும் மழையில் கைது செய்யப்பட்டு, அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய காவல்துறை கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியின் குற்றம் சாட்டினர். கடந்த வாரம் இதே பகுதியில் அமரன் திரைப்படத்தினை கண்டித்து அனுமதி இன்றி போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறை, பெட்ரோல் குண்டு வீசி 8 மணி நேரம் ஆகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறை, சம்பவ இடத்தைப் பார்வையிட வந்தவர்களை கைது செய்துள்ளது என்று குற்றம்சாட்டிய இந்துமுன்னணியினர், தாங்கள் கைது செய்து வைக்கப்பட்ட மண்படத்தில் குடிநீர் வசதி கூட செய்து தரப்படாமல் மிகப் பெரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர்.