சிவகாசியில் தயாராகியுள்ள ‘2025’ம் ஆண்டு தினசரி காலண்டர்…
தமிழகத்தின் ‘234’ சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய விவரங்களையும், ‘க்யூஆர் கோர்டு’ மூலம் அறியலாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் தயாராகும் தினசரி காலண்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால் காலண்டர்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது.
வழக்கமான காலண்டர்களுடன் மினி காலண்டர், மெகா காலண்டர், கடிகாரத்துடன் கூடிய காலண்டர், மாத காலண்டருடன் கூடிய தினசரி காலண்டர், பெட் பாய்ல்ஸ் காலண்டர், டை கட்டிங் காலண்டர் என 300க்கும் மேற்பட்ட ரகங்களில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் புத்தாண்டின் புதிய வரவாக, சிவகாசியில் தயாராகியுள்ள தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாள் தாளிலும் ஒரு ‘க்யூஆர் கோர்டு’ அச்சிடப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால் அதில் ஒரு ஊரின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள், முக்கிய தொழில்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். முதன் முதலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இடம் என, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கியமான விவரங்கள் இந்த க்யூஆர் கோர்டு மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புதுரக தினசரி காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறும் போது, சிவகாசியில் தயாராகும் காலண்டர்கள் தரமானதாகவும், புதுமையாகவும் இருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு புதுப்புது வகைகளில் காலண்டர்களை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு க்யூஆர் கோர்டு அச்சிட்ட காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய இடங்கள், வரலாற்று தகவல்கள், ஆன்மீக ஸ்தலங்கள், முக்கிய தொழில்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
எங்களின் இந்த புதிய முயற்சிக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.