தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவது இல்லை என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்திற்கு எதிரான போராட்டம் இது என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடே இந்த வேலைநிறுத்தத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சற்று முன் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
முக்கிய கோரிக்கைகள்ல்
1. டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட விபிஎப் கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம்
2. திரையரங்கு கட்டணங்களை படத்திற்கு ஏற்றவாறு குறைத்து மக்களுக்கு படம் பார்க்கும் ஆர்வத்தை மிகைப்படுத்த வேண்டும்
3. மக்களின் சுமையை அதிகரிக்கும் ஆன்லைன் டிக்கெட்டுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்
4. அனைத்து திரையரங்க்குகளிலும் உடனடியாக கம்ப்யூட்டரைஸ்டு டிக்கெட் புக்கிங்கை நடைமுறை படுத்த வேண்டும்
5. சிறிய படங்களின் முக்கிய பிரச்சனையான தியேட்டர் தட்டுப்பாட்டை சரிசெய்ய ரிலீஸ் ரெகுலேசன் கொண்டு வருதல்
6. தயாரிப்பு செலவுகளை வெகுவாக கட்டுப்படுத்த அனைத்து வித ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்
முக்கிய உரிமைகள்:
மக்களுக்கான மக்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் எப்படி மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என்ன விலை வைக்க வேண்டும், எந்தெந்த விதத்தில் அதை மக்கள் பயன்படுத்துமாறு ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டாக்க வேண்டும் போன்ற நடைமுறைகளை அப்பொருளின் உற்பத்தியாளரோ, நிறுவனமோதான் நிர்ணயம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. அதன் முழு உரிமை அந்த உற்பத்தியாளருக்கே உண்டு.
ஆனால் இந்தத் திரையுலகில் மட்டும் இது ஏன் நடைமுறையில் இல்லை. சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை கிடைக்கப் பெறவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.