
காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமது 93ம் வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஏப்.8ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு காலமானார்.
மிகச் சிறந்த தேசியவாதி, தேசபக்தர். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களின் நினைவுகளை மாணவர்கள் மத்தியிலும் தமிழகத்தின் மக்கள் மத்தியிலும் பதியச் செய்ய தம் கடைசிக் காலம் வரை தளராது பாடு பட்டவர். மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். தமிழில் இலக்கியப் புலமை பெற்றவர். அரசியலோடு கூட, இலக்கியப் பேச்சாற்றல் மிக்க இலக்கியவாதியாகவும் போற்றப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். 5 முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். மறைந்த குமரி அனந்தனுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள். இவரது மகள் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக.,வில் மாநிலத் தலைவராகவும், பின்னர் தெலங்கானா, புதுவை மாநில ஆளுநராகவும் செயல்பட்டவர். மறைந்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர்.
சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.
விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழில் தந்தி விண்ணப்பங்கள், பணவிடை அஞ்சல் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்றுத் தந்தவர்.
பல முறை யாத்திரைகளை மேற்கொண்டவர். இவரது பாத யாத்திரைகள் மூலம் தேசியத்தை கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் பரப்ப முயன்று வந்தார். பாரத மாதா சங்கம் என்ற சங்கம் அமைத்து சுதந்திரப் போரில் ஈடுபட்ட செங்கோட்டை வாஞ்சிநாதனின் நினைவாக, மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ ரயில் நிலையம் என அழைக்கப்படக் காரணமாக அமைந்தவர் குமரி அனந்தன். அதுபோல், தியாகி சுப்பிரமணிய சிவா கனவு கண்ட பாரதமாதா ஆலயம், பாப்பாரப்பட்டியில் அமைய வேண்டும் என்பதில் பெருமுயற்சி எடுத்து வந்தவர்.
மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் விருது வழங்கப்பட்டது. மறைந்த குமரி அனந்தன் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள டாக்டர் தமிழிசையின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.
தனது தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட பதிவு:
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக. பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்…
இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…
உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….
பாஜக., மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் பதிவு!
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.
பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர். தலைசிறந்த தேசியவாதியான ஐயா திரு. குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு.
தகப்பனாரை இழந்து வாடும் அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!