
ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 08.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ vs கொல்கொத்தா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (238/3, நிக்கோலஸ் பூரன் 87, மிட்சல் மார்ஷ் 81, எஉடன் மர்க்ரம் 47, ஹர்ஷித் ராணா 2/51, ரசல் 1/32) கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியை (234/7, அஜிங்க்யா ரஹானே 61, வெங்கடேஷ் ஐயர் 45, ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 38, சுனில் நரேன் 30, ஆகாஷ் தீப் 2/55, ஷர்துல் தாகூர் 2/52, ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த லக்னோ அனி தொடக்க வீரர்கள் எய்டன் மர்க்ரம் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மிட்சல் மார்ஷ் (48 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.
11ஆவது ஓவரில் எய்டன் மர்க்ரம் ஆட்டமிழந்த பின்னர் விளையாட வந்த நிக்கோலஸ் பூரன் (36 பந்துகளில் 87 ரன், 7 ஃபோர், 8 சிக்சர்) தனது அதிரடி ஆட்டத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது.
239 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி முதல் நான்கு விக்கட் விழும் வரை மிகச் சிறப்பாக விளையாடியது. க்விண்டன் டி காக் (9 பந்துகளில் 15 ரன், 2 சிக்சர்), சுனில் நரேன் (13 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), அஜிங்க்யா ரஹானே (35 பந்துகளில் 61 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) என முதன் நான்கு மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர்.
ஆனால் 13ஆவது ஓவரில் ரஹானே, 14ஆவது ஓவரில் ரமன்தீப் சிங் (1 ரன்), 15ஆவது ஓவரில் ரகுவன்ஷி (5 ரன்), 17ஆவது ஓவரில் ஆண்ட்ரூ ரசல் (7 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்ததால் கொல்கொத்தா அணியின் ரன் சேர்க்கும் வேகம் திடீரெனக் குறைந்தது. அதன் பின்னர் ரிங்கு சிங் (15 பந்துகளில் 38 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), ஹர்ஷித் ராணா (9 பந்துகளில் 10 ரன்) வெற்றி இலக்கை அடைய முயற்சித்தும் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.
ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் நிக்கோலஸ் பூரன் அறிவிக்கப்பட்டார்.
பஞ்சாப் vs சென்னை
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/6, பிரியான்ஷ் ஆர்யா 103, ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 52, மார்கோ ஜேன்சன் ஆட்டமிழக்காமல் 34, கலீல் அகமது 2/45, அஷ்வின் 2/48, முகேஷ் சௌத்ரி, நூர் அகமது தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (201/5, ரச்சின் ரவீந்திரா 36, டேவன் கான்வே 69, ஷிவம் துபே 42, எம்.எஸ். தோனி 27, லாக்கி ஃபெர்கூசன் 2/27, கிளன் மேக்ஸ்வெல் 1/11, யஷ் தாகூர் 1/39) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆனால் முதல் எட்டு ஓவர் முடிவதற்குள் பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (4 ரன்), நெஹல் வதேரா (9 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இவர்கள் எடுத்த மொத்த ரன் 23 ரன். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 83/5. மீதமுள்ள 60 ரன் களை பிரியன்ஷ் ஆர்யா அடித்தார். 42 பந்துகளில், 7 ஃபோர், 9 சிக்சர்களுடன், 103 ரன்கள் அவர் அடித்தார்.
13.4 ஓவரில் அவர் ஆட்டமிழக்காமல் 20 ஓவர் வரை அவர் ஆடியிருந்தால் கிரிஸ் கெயில் போல 175 ரன் எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆர்யா ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 154/6. அடுத்த ஆறு ஓவர்களில் ஷஷாங்க் சிங் (36 பந்துகளில் 52 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மார்கோ ஜேன்சன் (19 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் அதிரடியாக அடி அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 219/6 என உயர்த்தினர்.
20 ஓவர்களில் 220 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (23 பந்துகளில் 36 ரன், 6 ஃபோர்) மற்றும் டேவன் கான்வே (49 பந்துகளில் 69 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இன்று ருதுராஜ் கெய்க்வாட் (ஓரு ரன்) சோபிக்கவில்லை.
டேவன் கான்வே உடன் இணைந்து ஷிவம் துபே (27 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் ஆட்டமிழக்கும்போது மீதமுள்ள நான்கு ஓவர்களில் வெற்றிக்கு இன்னமும் 69 ரன்கள் தேவைப்பட்டன. அந்த சமயத்தில் 17.5ஆவது ஓவரில் டேவன் கான்வே ரிடயர்ட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
துபே ஆட்டமிழந்தபோது தோனி (12 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆடவந்தார். கான்வே ஆட்டமிழந்தபோது ரவீந்திர ஜதேஜா (ஆட்டமிழக்காமல் 9 ரன்) ஆடவந்தார். தோனி 20ஆவது ஓவரில் முதல் பந்தில் அவுட் ஆனார். அப்போது விஜய் ஷங்கர் (2 ரன்) ஆடவந்தார். இந்த மூவராலும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. அதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்தது. எனவே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் மட்டையாளர் பிரியான்ஷ் ஆர்யா அறிவிக்கப்பட்டார்.
இன்று நடந்த இரண்டு ஆட்டங்களும் அதிக ரன் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக ஆடிய அணிகள் சிறப்பாக ஆடியபோதிலும் கடைசியில் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியாததால் சொற்ப ரன்களில் தோல்வியைத் தழுவின. சென்னை அணி பந்து வீசியபோது கையில் வந்து விழுந்த பந்துகளைக்கூடத் தவறவிட்டு கேட்ச் பிடிக்காமல் விட்டனர்.





