
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு நினைவுச் சின்னமாக சிலை வைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
ஜூன் 17ம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை, திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் உள்ள பாலபாக்யா அரங்கில் தேசிய சிந்தனைப் பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் சென்று, வாஞ்சி படத்துக்கு மரியாதை செய்து, அருகே உள்ள நினைவு மண்டபத்தில் வாஞ்சிக்கான புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலையில் நெல்லை, வண்ணார்ப்பேட்டையில் படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் மற்றும் தேசிய சிந்தனைப் பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 17 வாஞ்சி நினைவு நாளில் வாஞ்சியைக் குறித்தும், ஆபரேஷன் சிந்தூரில் நம் ராணுவத்தினரின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்கு பாராட்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தமிழ் முழக்கப் பேரவையின் தலைவர் சு.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரக்ஞா பிரவாஹ் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கி, பாரத அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் குறித்து உலவும் அவதூறுகளுக்கு மறுப்பினைச் சொல்லி, வாஞ்சியின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும், தென்னகத்தில் உள்ள செங்கோட்டையில் ஏற்றப்படும் இந்த பாரத மாதாவின் சுதந்திரக் கொடி, விரைவில் வடக்கே உள்ள தில்லி செங்கோட்டையில் ஏறும் என்று பாரதமாதா சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாஞ்சி உரையாற்றியதைக் குறிப்பிட்டு, வாஞ்சியின் நினைவாக செங்கோட்டை முதல் தில்லி வரை வாஞ்சி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சேவை ஏற்படுத்தப் பட வேண்டும் என்றும், செங்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வாஞ்சி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லை ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்துக் குறிப்பிட்டு, நெல்லை மண்ணின் நாகரிகப் பழைமை கொண்டாடப்பட வேண்டும் என்ற தன் கருத்தைச் சொல்லி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு புகழ்மாலை சூட்டினார். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் தேசியமும் படைப்பாளர்களும் என்ற தலைப்பில் பேசினார்.
முன்னதாக, வாஞ்சியின் தம்பி மகன் கோ ஹரிஹர சுப்பிரமணியன், மற்றும் அவர் மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாஞ்சிநாதனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். சமூக சேவைகர் பி.வெங்கட்ராமன் முன்னிலை வகிக்க, தேசிய சிந்தனைப் பேரவை தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி நிகழ்ச்சியை தொகுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்து அறிமுக உரை நிகழ்த்திய தேசிய சிந்தனைப் பேரவை தமிழக அமைப்பாளர் வ.மு. முரளி, இக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார். நிகழ்ச்சியில் நெல்லை வாழ் படைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
படைவீரர்களைப் பாராட்டும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் முக்கியமான இரு தீர்மானங்களுடன், நெல்லைக்கான ஒரு தீர்மானமாக, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிக்கு நினைவுச் சிலை மத்திய அரசின் ரயில்வே துறை இடமளித்து அங்கே நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விவரம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 17.06.2025 அன்று நெல்லையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிடும் பிரகடனம் இது…
தீர்மானம்- 1: முப்படைகளுக்கு வீரவணக்கம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாவுக்கு வந்த 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, பயங்கரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கும் பாகிஸ்தானுக்குப் படிப்பினை அளிக்கும் வகையில், துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ (நெற்றித் திலக நடவடிக்கை) என்ற பெயரும் சூட்டப்பட்டது.
அதன்படி, பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடியை கடந்த மே 7 முதல் மே 10 வரை, 4 நாட்களில் அளித்தது. மே 7ஆம் தேதி அதிகாலையில், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஊடுருவிய நமது விமானப்படை விமானங்கள் நடத்திய துல்லியத் தாக்குதலில், பயங்கரவாதிகளின் 11 பயிற்சி முகாம்கள் நிர்மூலமாயின. அதேசமயம், பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே தடுத்து நிறுத்தி நமது ராணுவம் சாதனை படைத்தது. அடுத்த நாட்களில் நமது ராணுவம் தொடர்ந்து நடத்திய வான் தாக்குதல்களில் பாகிஸ்தானின் படைத்தளங்கள் பலத்த சேதமடைந்தன. இறுதியில் அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று நமது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.
உண்மையில், இந்தியாவுக்கு அண்டைநாடு மீது போர் தொடுக்க விருப்பமில்லை. அதேசமயம், அந்நாட்டின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தவும், அந்நாடு திருந்த ஒரு வாய்ப்பளிக்கவும் தான், அந்நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போர் அல்ல. நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் மட்டுமே. இந்த நடவடிக்கையில் பாக். ஆதரவு பெற்ற சுமார் 300 பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான பாக். படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தருணத்தில், இந்தியா மீதான பகையைக் கைவிட்டு, சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறு நமது அண்டை நாட்டுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சதிகள் எதுவும் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை அந்நாட்டுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பஹல்காமிலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போதும், எதிரி நாட்டின் பீரங்கித் தாக்குதலிலும் வீரமரணம் அடைந்த நமது பாதுகாப்புப் படையினர், குடிமக்கள் உள்ளிட்ட அனைவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.
மிகவும் குறைந்த உயிர்ச்சேதத்துடன், அதிநவீனப் போர் முறையில், நான்கே நாட்களில் பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பை நமது வீரர்கள் அழித்துள்ளனர். இந்தப் பதிலடி நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வெற்றித் திலகமாக மிளிர்கிறது. நமது முப்படைகளின் நிகரற்ற வீரத்துக்கும், மக்களாட்சியின் மாண்புக்குக் கட்டுப்பட்ட அதன் சீரிய செயல்திறனுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறோம்.
தீர்மானம்- 2: மத்திய அரசுக்கு வேண்டுகோள்
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக தகுந்த பதிலடி கொடுத்திருப்பதைப் பாராட்டுகிறோம். நாட்டுக்குச் சவாலான இந்தக் காலகட்டத்தில் நமது அரசியல் வேற்றுமைகளை மறந்து, அரசுக்கும் ராணுவத்துக்கும் உறுதுணையாக நிற்பது குடிமக்கள் அனைவரின் பொறுப்பாகும்.
படைப்பாளர்கள் சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ்பவர்கள். எனவே, நெல்லையில் இயங்கும் படைப்பாளர்கள் அனைவரும், நமது அரசின் செயல்பாட்டையும், முப்படை வீரர்களின் தீரத்தையும் மனமாரப் பாராட்டுகிறோம்.
அதேசமயம், சித்தாந்தரீதியாக இந்திய அரசை எதிர்க்கும் சிலர், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளியிலிருந்து தாக்கும் பகைவர்களை விட துரோகிகளின் உட்பகை மோசமானது. எனவே, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, காசி சங்கமம், சௌராஷ்டிர சங்கமம் நிகழ்வுகள் போல ‘காஷ்மீர் சங்கமம்’ நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல, ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!வந்தேமாதரம்!





