
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
அண்மையில் சாதனை படைத்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பாராட்டும் வகையில், ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி சென்னையில் ஜுன் 15 ஆம் தேதி மாலை நடைபெற்றது,
இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
கர்நாடக இசைப்பாடகர் டாக்டர் ஆர்.கணேஷ் குழுவினரின் தேசபக்திப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதையடுத்து, மகளிர் படைப்பாளர்கள் ஐவர், குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை மங்களகரமாகத் தொடங்கிவைத்தனர்.
படைப்பாளர்கள் சங்கமத்தில் முதல் நிகழ்ச்சி, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மகாகவி பாரதியின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வின் ஆரம்பத்திலேயே, காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் யுத்த நடவடிக்கை ஆகியவற்றிலும் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்திலும் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடக்க நிகழ்வுக்கு, தொழிலதிபரும் எழுத்தாளருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் மோகன் ஜி ஷத்ரியன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாஸ்கர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
படைப்பாளர்கள் சங்கமம் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து ஒரே நாடு பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் எடுத்துரைத்தார். பஹல்காம் படுகொலைக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியவுடன், உள்நாட்டில் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் தேசவிரோதமாக சிலர் தமிழகத்தில் அறிக்கை வெளியிட்டதை சுட்டிக் காட்டிய அவர், அந்தக் களங்கத்தைப் போக்கவே, கோவையைத் தொடர்ந்து சென்னையில் ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நடத்தப்படுகிறது என்றார்.
தலைமையுரை ஆற்றிய நல்லி குப்புசாமி செட்டி, படைவீரர்கள் எல்லையில் கண் துஞ்சாது காவல் காப்பதால் தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது என்றார்.
வாழ்த்துரை வழங்கிய கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக வெற்றி பெற, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட ஆத்ம நிர்பர் செயல்பாடுகளே காரணம்; இந்தியாவில் தயாரான ஆயுதங்களின் வலிமையை உலகம் இப்போது உணர்ந்து கொண்டுவிட்டது என்றார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் சுயமுன்னேற்றப் பயிற்சியாளருமான மேஜர் மதன்குமார் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், ஆபரேஷன் சிந்தூர் எவ்வாறு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு, பாகிஸ்தான் குடிமக்கள் பாதிக்கப்படாமல், பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் நிர்மூலம் செய்யப்பட்டன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்து படைப்பாளர்கள் சங்கமம் சார்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பத்திரிகையாளரும் தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளருமான வமு.முரளி முன்மொழிந்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டுவதாகவும், இதற்காக இன்னுயிர் ஈந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் முதல் தீர்மானம் குறிப்பிட்டது. பஹல்காம் படுகொலை நிகழ்ந்த ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; அந்த நாளில் காஷ்மீர் சங்கமம் நிகழ்வை மத்திய அரசு பஹல்காமில் நடத்த வேண்டும் – என்று இரண்டாவது தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் 6 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
அதையடுத்து ‘வீரர்களுக்கு துணை நிற்கும் பேனா முனை’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் துக்ளக் ரமேஷ், என்.சி.மோகன்தாஸ், பா.பிரபாகரன், சௌகத் அலி, கோதை ஜோதிலட்சுமி, டாக்டர் காயத்ரி சுரேஷ், தேவப்பிரியா, ஆனந்த் பிரசாத், முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், கணேஷ்குமார், ஓமாம்புலியூர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்து, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் சுவாதி, விவேக்பாரதி, சுரேஜமீ, சுராகி, பத்மன், புதுகை பாரதி, நந்தலாலா, ராகவேந்திரா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
இறுதியில் படைப்பாளர்கள் சங்கம விழாக் குழுவின் தலைவர் திராவிட மாயை சுப்பு தலைமையில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
பதிப்பாளர் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான கவிஞர் ரவி சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.
மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான இசைக்கவி ரமணன் நிறைவுரையாற்றினார். அவர் தனது உரையில், தேசிய உணர்வோடு வீரர்களுக்கு நன்றி சொல்லும் படைப்பாளர்களின் விழாவைப் பாராட்டினார்.
அன்று அவுணர்களிடமிருந்து காத்தது செந்தூர் என்றால்,
இன்று அன்னியர்களிடம் இருந்து காத்தது சிந்தூர் என்றார் அவர். படைவீரர்களைப் பாராட்டி அவர் இன்னிசைக் கவிதையும் பாடினார்.
மூத்த பத்திரிகையாளர் பத்மன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் ஜவஹர் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.





