
பஸ்ஸில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் வள்ளியூர் ஊருக்குள் போகாது என்று சொல்லி, அவமானப் படுத்தி, கோயில் பூஜாரியை பைபாஸ் சாலையிலேயே இறக்க முயன்ற ‘மதவாத’ அரசு பஸ் நடத்துனருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டியிட வைத்த பூஜாரியின் வீட்டுக்குச் சென்று இந்து முன்னணியினர் பாராட்டு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையைச் சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு நவ.9ம் தேதி அதிகாலை, 4:50க்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை 5 மணி அளவில் நாகர்கோவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் வள்ளியூரைச் சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில், ‘பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்’ என, நடத்துனர் அந்தோணி அடிமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், “இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லுமே. ஏன் இன்று என்னை பைபாசில் இறங்கச் சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அகம்பாவத்துடன் பதிலளித்த நடத்துனர், “பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் சென்றுவர முடியாது” என அவதுாறாக பேசியுள்ளார்.
ஆனால் பயணி சுப்பிரமணியன் பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்தார். அவரது வற்புறுத்தலால் பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கே அவரது குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காரணம் அறிந்து வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து சுப்பிரமணியன் கூறுகையில், ”பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் நடத்துனருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் பொதுவான டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். நடத்துனரும் என்னை அவதுாறாகப் பேசினார். இதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்” என்றார்.
இதனிடையே, இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி நடப்பதாகவும், ஆக.31ம் தேதி இதே பஸ் வள்ளியூருக்குள் செல்லாததால் பஸ்ஸின் நடத்துனரும் ஓட்டுனரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது பேரவைத்தலைவர் அப்பாவு தொகுதி.
திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், ‘ஒன் டூ ஒன்’ பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.
இத்தகைய பின்னணியில், பயணியிடம் மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட நடத்துனர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பூசாரி சுப்பிரமணியனை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பாராட்டிய இந்து முன்னணி அமைப்பினர், அவருக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம், நெல்லை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம். பொருளாளர் துணைத்தலைவர் ஜெயக்கிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் பரமசிவம், களக்காடு ஒன்றிய தலைவர் கணபதிராமன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், “நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் சர்ச்சில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு ஏற முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற கோவில் பூசாரியை நடத்துனர் அந்தோணிஅடிமை, ‘இது நாலுமாவடி சர்சில் இருந்து வரும் பேருந்து. ஆட்களை ஏற்ற முடியாது’ என தகராறு செய்து, பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளதோடு, பூசாரி தோற்றத்தில் இருந்தவரை ஏளனமாக மனதில் வைத்து பேசியுள்ளார்.
பூசாரி பாலசுப்ரமணியன் தனது மனைவி குழந்தையோடு போராடி பேருந்தில் ஏறிய பின்பும் பேருந்தில் இருந்த சில பயணிகள் மற்றும் நடத்துனரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்து செல்லாது என பயணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வள்ளியூரில் பொதுமக்கள் போராடியுள்ளனர். நடத்துனரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத வன்மத்தோடு செயல்பட்ட நடத்துனர் அந்தோணிஅடிமையை தனிநபராய் எதிர்த்து உரிமையை நிலைநாட்டிய பூசாரி பாலசுப்ரமணியன் அவர்களை வள்ளியூர் பொத்தையடியில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம். தனிமனிதனாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் இந்துக்கள் அனைவரிடத்திலும் உருவாக வேண்டும் என பாராட்டி, வாழ்த்தினோம்” என்றார்.





