
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று காலை அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு வியாழக் கிழமை இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் தில்லி சென்ற தமிழக அதிகாரிகள் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க முடியாது என எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
தில்லியில் தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்தேவுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியபோது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அவர் பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.



