டிடிவி தினகரன் – திவாகரன் மோதல் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “பங்காளிகள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்; அந்த நாடகத்தை பற்றி தற்போது கருத்து சொல்ல முடியாது
” என்றார்.
அதிமுக உள்கட்சி பிரச்னையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்த அணிக்கு இரட்டை இலையும், கட்சி பெயரும் கிடைத்த நிலையில் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
அவருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குடும்பத்திற்குமான மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அண்மையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் தனது முகநூல் பதிவில் மாபெரும் தவறுகளை பொறுத்திக்கொண்டிருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு கலைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அது டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. அமைப்பை குறிப்பிடுவதாக அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை ஜெய் ஆனந்த் மறுத்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான வெற்றிவேல் தினகரனுக்கு ஆதரவாக முகநூலில் அறிக்கை ஒன்றை பதிவிட்டார்.
அதில் எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்ற ரீதியில் திவாகரன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சையில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்ற டி.டி.வி.தினகரன், கட்சிக்கு எதிராக சமூகவலை தளங்களில் பதிவிட்டால் உறவாக இருந்தாலும் மன்னிக்கமாட்டேன் என திவாகரன் தரப்பை மறைமுகமாக எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.