சென்னை: குழந்தைக் குரலில் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 ஆவது வயதில் இன்று காலமானார்.
1931-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி செய்தாராம். நாம் இருவர் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் பாடலுக்காகவே திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழித் திரைப்படங்களில், 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர்.
களத்தூர் கண்ணம்மா படத்தில், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று குழந்தைக் கமல் பாடிய உருக்கமான பாடலைக் கேட்டு கண்ணீர் கசியாதவர்கள் இருக்க இயலாது.. அந்தப் பாடலைப் பாடியவர் ராஜேஸ்வரி. அதுதான் கமல்ஹாசன் அறிமுகம் ஆன படம்!
‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எனை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950களில் பிரபலம். டவுன் பஸ் படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
தொடர்ந்து, குழந்தைகளுக்கான குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பாடி, ரசிகர்களின் உள்ங்களைக் கொள்ளை கொண்டார். சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா, ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ என துவக்க காலத்தில் வந்த குழந்தைப் பாடல்கள் ராஜேஸ்வரி பாடியவைதான்! அதுமட்டுமல்ல, பின்னாளில் பேபி ஷாம்லிக்காக ’துர்கா’ படத்தில் பின்னணிக் குரலும் கொடுத்தார்.
1989ல் ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவரும் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் மிகப் பிரபலம். சங்கர் கணேஷ் இயக்கத்தில் பாடல்கள் பல பாடியுள்ளார்.




