சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வுக்காக எர்ணாகுளம் அழைத்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்ட செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.
கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு, கேரள அரசின் தலைமைச் செயலாளர் வாயிலாக எர்ணாகுளம் ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமியின்உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றினை எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் மனைவி மற்றும் மகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.