நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தாக்குதலால், கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரள ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம் என்றும் கூறினார்
நிபா வைரஸ் சில குறிப்பிட்ட வௌவால்கள், ஆந்தை மற்றும் பன்றிகளிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் எச்சில் பண்ண பழம், காய் மற்றும் இலைகளை உண்ணும் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவில் இந்த நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பெரம்பரா, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபா வைரஸ் தாக்கியவருக்கு முதல் அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்றும், அதன் பின் கடுமையான தலைவலி, காய்ச்சல் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் விரைவில் மூளை காய்ச்சலாக மாறி விடுவதால் இந்த வைரஸ் தாக்கப்பட்ட 75சதவீதம் பேர் உயிரிழந்து விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படும் இடங்களை மத்திய மருத்துவ குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர்.
கேரளாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைப்பகுதியில் வாழும் மக்களுக்கு முன்னேச்சரிக்கை மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தை பொறுத்துவரை நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



